கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

நெல்லையில் தே.மு.தி.க. கவுன்சிலருக்கு வெட்டு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

திருநெல்வேலியில் தே.மு.தி.க. கவுன்சிலரை ஒரு கும்பல் வியாழக்கிழமை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

Updated On :8 ஆகஸ்ட் 2013, 6:08 pm IST

திருநெல்வேலியில் தே.மு.தி.க. கவுன்சிலரை ஒரு கும்பல் வியாழக்கிழமை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதனை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை வி.எம் சத்திரம் ஜவஹர் நகரை சேர்ந்த பிச்சமுத்து தாஸ் மகன் தானேஸ்வரன் (37). இவர், திருநெல்வேலி மாநகராட்சியின் 18-வது தே.மு.தி.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு நம்பி தேவி என்ற மகளும் அருண் முத்துசெல்வம் என்ற மகனும் உள்ளனர்.

   இந்நிலையில் தானேஸ்வரன் வியாழக்கிழமை காலை தனது மகனை அருகில் உள்ள பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாரம். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதையடுத்து தானேஸ்வரன் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

   இருப்பினும் அந்த கும்பல் அவரை துரத்தி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டிக் காயம் அடைந்த தானேஸ்வரனை அப்பகுதி மக்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.    

   இதற்கிடையே தானேஸ்வரனை அரிவாளால் வெட்டியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

   தகவல் அறிந்ததும் திருநெல்வேலி கோட்டாட்சியர் பெருமாள், மாநகர காவல் துணை ஆணையர் மு. ராஜராஜன், உதவி ஆணையர்கள் லோகநாதன், ராஜமன்னார், ஆய்வாளர்கள் பிரான்சிஸ், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

   தானேஸ்வரன் வெட்டப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த பகுதியில் ஏற்கனவே இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு, அதன் காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறதாம். அதன் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.