

வீட்டுக் காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஃபைபர் கிளாஸ் தொட்டியை திருப்பூரைச் சேர்ந்தவர் உருவாக்கியுள்ளார்.
வீட்டுக் காய்கறிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட இறைச்சி எலும்புகள் உள்ளிட்டவற்றை இயற்கை உரமாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஃபைபர் கிளாஸ் தொட்டியை முரளிதர் (47) என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது:
காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கக் கூடிய வகையில் ஃபைபர் கிளாசால் ஆன தொட்டி 4 அறைகளுடன் கூடியது. காற்றுப்புக முடியாதவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மேல் பகுதி அறையில் காய்கறிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட இறைச்சியின் எலும்பு உள்ளிட்ட கழிவுகளை கொட்டி, 5 வகையான நுண்ணுரியிரிகள் கலந்த கலவைப் பொடி தூவி மூடி வைக்க வேண்டும். 15 நாள்களில் இக்கழிவுகள் மக்கிப்போகும். மேல் அறையின் கீழ்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள டிரேயை வெளியே இழுத்தால், மக்கிய கழிவுகள் இரண்டாவது அறைக்குள் விழும். அதில், 15 நாள்கள் இக்கழிவுகளை வைத்திருக்கும்போது அதன் மட்கும் தன்மை தொடர்ந்து நடைபெறும். மேல் அறையில், மீண்டும் காய்கறிக் கழிவுகளை கொட்டி முன்போல் வைக்க வேண்டும்.
மட்கிய கழிவுகளை 3 ஆவது அறையில் 15 நாள்கள் வைத்திருக்கும் நிலையில் அது இயற்கை உரமாகக் கிடைக்கும்.
இதன் 4-ஆவது அறை என்பது மேல் அறைகளில் கழிவுகள் மட்கும்போது, உண்டாகும் கசிவுத் தண்ணீரை சேகரிக்கும் அறை ஆகும். காய்கறிக் கழிவுகள் மொத்தம் 45 நாள்களில் இயற்கை உரமாகிவிடும். அதைத் தொடர்ந்து 15 தினங்களுக்கு ஒருமுறை என இயற்கை உரத்தை இதன் மூலமாக தயாரிக்க முடியும்.
காய்கறிக் கழிவுகள் மட்குவதற்கு 5 வகையான நுண்ணுயிரிகள் அடங்கிய கலவைப் பொடியை உடன் சேர்க்க வேண்டும். செத்த எலி மண்ணில் கிடந்தால், சில தினங்களில் அது மட்கிவிடுகிறது. மண்ணில் இருக்கும் நுண்ணுரியிரிகள் அதை மட்கச் செய்கின்றன.
அதைப் போன்று, நுண்ணுயிரிக் கலவையை தூவி வைப்பதன் மூலமாக காய்கறிக் கழிவுகள் மட்கி இயற்கை உரமாகிறது. போட்டோ சிந்தடிக் பாக்டீரியா, லாக்டிக் ஏசிட் பாக்டீரியா, பிளமன்டைஸ் பூஞ்சை, ஈஸ்ட், ஆக்டினோமைசெட்ஸ் என்ற 5 வகையான நுண்ணுரியிரிகள் அடங்கிய கலவை இதற்கு பயன்படுத்தப்படுகிறது.
வீடுகளில், அடுக்குமாடி குயிருப்புகளில் பயன்படுத்தப்படும் காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவதன் மூலமாக வீதிகளில் கொட்டப்படும் மட்கும் குப்பை தேக்கத்தை குறைக்க முடியும்.
இந்த ஃபைபர் கிளாஸ் தொட்டியை வீட்டில் நமக்கு வசதிப்படும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். காய்கறிக் கழிவுகளை இதில் கொட்டி வைப்பதால் எவ்வித துர்நாற்றமும் ஏற்படாது என்றார்.
இவர் ஏற்கெனவே, சூடு உண்டாக்காத ஹெல்மெட் தயாரித்துள்ளார். இந்த ஹெல்மெட் உள்பகுதியில் தென்னை நார் வைக்கப்பட்டும், அணியும்போது தலைப் பகுதியில் உண்டாகும் சூடான காற்றை வெளியேற்ற வசதியாக 9 வோல்ட் திறன் உள்ள பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.
பனியன் தொழிற்சாலைகளுக்குத் தேவையான எலக்ட்ரோ மேக்னடிக் கன்வேயர் டேபிளை வடிவமைத்திருக்கிறார். பின்னலாடைகளை தைக்கும் தொழிலாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்னலாடை துணிகளை இந்த கன்வேயர் டேபிள் நகர்த்திக் கொடுக்கும்.
தனது புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறும் முரளிதர் கேரளத்தில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். அவர் கடந்த 25 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி உள்ளார். தற்போது இது போன்ற கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.