சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழா அதிவிமரிசையாக நடந்து வருகிறது. ஜன. 14 ஆம் தேதி மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனத்தை காணலாம்.
இந்த விழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை டிச. 30-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. டிச. 31 முதல் பூஜை வழிபாடு, நெய் அபிஷேகம் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து நெய் அபிஷேகம் செய்கின்றனர்.
பேட்டைத் துள்ளல்: மகரஜோதி விழாவையொட்டி, ஜனவரி 11-ம் தேதி எரிமேலியில் நடைபெறும் பேட்டைத் துள்ளல் வசந்த விழா மிகப் பிரபலமானது.
எரிமேலியில் அன்று பகலில் வானில் கருடன் வட்டமிட சுவாமி ஐயப்பனின் தாய் வழி சொந்தங்களாக அழைக்கப்படும் அம்பலப்புழா பக்தர்கள் பேட்டைத் துள்ளி வரும் உற்சவம் நடைபெறும். மாலையில் வானில் நட்சத்திரம் உதிக்க ஐயப்பனின் தந்தைவழி சொந்தங்களான ஆலங்காடு சிவபக்தர்கள் பேட்டைத் துள்ளும் உற்சவம் நடைபெறும்.
திருவாபரணப் பெட்டி ஊர்வலம்: ஜனவரி 12-ல் பந்தளத்தில் இருந்து சுவாமி ஐயப்பனுக்கு உரிய மகரஜோதி திருவாபரணப் பெட்டி, மாளிகைபுறம் மஞ்சமாதாவுக்குரிய தங்கக் கொடிப் பட்டம் அடங்கிய திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபயணமாக புறப்படும். ஜன. 13-ல் பம்பையில் பம்பா விளக்கும், பம்பா சத்யாவும் நடைபெறும்.
மகரஜோதி தரிசனம்: ஜன. 14 ஆம் தேதி மாலை பொன்னம்பலமேட்டில் வானில் நட்சத்திரம் உதிக்க, மூன்று முறை மகரஜோதி தரிசனம் தெரியும்.
இதையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை சபரிமலை தேவஸ்தான நிர்வாகமும், திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், உறுப்பினர் சுரேஷ் மற்றும் கேரள அரசு விரிவாக மேற்கொண்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் இருந்தது. பம்பை, நிலக்கல், சாலக்காயம், எரிமேலி என எங்கு பார்த்தாலும் காவி உடையணிந்து இருமுடி சுமந்த பக்தர்கள் காணப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.