ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சிதம்பரத்தில் தீர்த்தகுளங்கள் தூர்வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா! நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் அபாயம்

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போன சிதம்பரம் நகரில் உள்ள தீர்த்த குளங்கள் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்களின்

News image
Updated On :27 ஜூலை 2013, 12:51 pm

ஜி.சுந்தரராஜன்

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போன சிதம்பரம் நகரில் உள்ள தீர்த்த குளங்கள் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

பூலோக கைலாயம், ஆகாய ஸ்தலம் என்று என்றழைக்கப்படும் தில்லைவனம்தான் தற்போதைய சிதம்பரம் நகரம். ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் அமைந்துள்ள சிதம்பரம் நகரில் சோழர் காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமலிருக்க 12 தீர்த்த குளங்கள் அமைக்கப்பட்டன.

நடராஜர் கோயிலில் சித்சபை அருகே உள்ள பரமானந்தகூடம் (கிணறு), சிவகங்கை தீர்த்த குளம் உள்ளன. மற்றைய குளங்கள் நகரை சுற்றி உள்ளன. வியாக்கிரபாதர் தீர்த்த குளம், அனந்தீஸ்வர தீர்த்த குளம், நாகச்சேரி குளம், புலிமடு குளம், சிவப்பிரியை தீர்த்த குளம், திருபாற்கடல், ஓமக்குளம், ஞானப்பிரகாசர் குளம், ஆயிகுளம், பிரம்மதீர்த்த குளம் ஆகியவை உள்ளன.

நடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தங்களை தவிர நகரைச் சுற்றியுள்ள மற்ற தீர்த்த குளங்கள் அனைத்தும் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்ந்து போயும் உள்ளது. போதிய மழையின்றி கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியினால் தற்போது சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்கள் நீருக்கு அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நகரில் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் உள்ள குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கவும் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரும், சமூக ஆர்வலர்களும் இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.

நகரில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து வலியுறுத்தியுள்ளனர். மேலும் சிதம்பரம் நகரில் விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளனர். விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து முறையிடுவது எனவும் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தெப்போற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசர் குளம் முற்றிலும் தூர்ந்து போய், சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தெப்போற்சவம் நின்று போய்விட்டது. அதுபோன்று தில்லையம்மன் கோயில் அருகே உள்ள சிவப்பிரியை தீர்த்தகுளமும் தூர்ந்து போய் உள்ளது. எனவே பிரசித்த பெற்ற ஸ்ரீநடராஜர் கோயிலின் தீர்த்த குளங்களான மேற்கண்ட குளங்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை தேக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் ஒட்டு மொத்த குரலாகும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் புறவழிச்சாலை தடுப்பணையாக மாறி மழைநீர் சிதம்பரம் நகருக்கு வராமல் தடுத்து குளங்கள் நிரம்பாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து நகரமே பாலைவனமாகிவிட்டது. எனவே மழைநீர் நகருக்குள் வர புறவழிச்சாலையில் ரெவின்யூ வாய்க்கால்களை சீரமைத்தும், மேலும் சில வடிகால்களை புதிதாக அமைத்தும் சிதம்பரம் நகர குளங்களுக்கு நீர் வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் சீனு.அருணாசலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.