கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

மேலப்பாளையத்தில் 17.5 கிலோ வெடி பொருள்கள், 142 டெட்டனேட்டர்கள் பறிமுதல்: 5 பேர் கைது

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17.5 கிலோ வெடி பொருள்கள் மற்றும் 142 எலெக்ட்ரி்க் டெட்டனேட்டர்களை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீஸார் பறிமுதல்

Updated On :28 ஜூலை 2013, 6:54 pm IST

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17.5 கிலோ வெடி பொருள்கள் மற்றும் 142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு பா.ஜ.க. மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ. கட்சியின் மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 19.7.2013-ல் சேலத்தில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும், இந்து முன்னணி மாநிலச் செயலரான வெள்ளையப்பன் கடந்த 1.7.2013-ல் வேலூரில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த இரு கொலை வழக்குகள் குறித்து விசாரிக்க மாநில குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்பேரில் ஐ.ஜி. மஞ்சுநாதா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த கொலை தொடர்பாக அபுபக்கர் சித்திக், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 4 பேரது புகைப்படங்களை சிறப்பு புலனாய்வுக் குழு வெளியிட்டுள்ளது. இவர்களை பற்றி துப்புக் கொடுத்தால் தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 20 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பெருமளவிலான வெடி பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு டி.எஸ்.பி. கார்த்திகேயன், ஆய்வாளர்கள் சிவக்குமார், நாகராஜன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் திருநெல்வேலி மாநகர போலீஸார் உதவியுடன் சனிக்கிழமை இரவு மேலப்பாளையத்தில் சோதனை நடத்தினர்.அப்போது மேலப்பாளையம் பங்களாப்பா தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 17.5 கிலோ எடையுள்ள வெடி பொருள்கள் (ஜெலாட்டின் குச்சிகள்) மற்றும் 142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் ஆகியவற்றை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வெடி பொருள்கள் மறைத்து வைத்திருந்தது அந்த வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்கு தெரியாதாம்.

அந்த பெண்ணின் உறவினரான ஆட்டோ டிரைவர் அன்வர் பிஸ்மி (20) என்பவர் இந்த பார்சலை அங்கு கொண்டு வைத்தாராம். வெளிநாட்டில் உள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்புவதற்காக இந்த பார்சலில் பொருள்கள் இருப்பதாகவும், சில நாள்கள் இங்கே இருக்கட்டும் என அன்வர் பிஸ்மி தெரிவித்தாராம். இதையடுத்து பங்களாப்பா தெருவை சேர்ந்த அன்வர் பிஸ்மியை போலீஸார் கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலப்பாளையம் ஆமீன்புரம் 5-வது தெருவை சேர்ந்த கௌஸ் மைதீன் மகன் முகமது தாசிம் (33),  தைக்கா தெருவை சேர்ந்த மஸ்தான் மகன் சாகுல் ஹமீது என்ற கட்டை சாகுல் (38),  வீரா தெருவை சேர்ந்த முகமது சம்சுதீன் (21) மற்றும் குட்டி என்ற நூருல் ஹமீது (22) ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதில் முகமது தாசிம் சிறப்பு புலனாய்வுக் குழுவால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயினின் உறவினராவார். முகமது தாசிம் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.வேலூரில் இந்து முன்னணி செயலர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட போது, அந்த இடத்தில் இருந்து பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வெடிகுண்டுகளுக்கும், மேலப்பாளையத்தில் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள வெடி பொருள்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,  ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெளையப்பன் கொலைகளுக்கும், மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீஸ் நிலைய வளாகத்திற்குள் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.