விருதுநகர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனையில் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலா ஆகியவைகளை பறிமுதல் செய்து அளித்தனர்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் கவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழகத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் குட்கா மற்றும் பான்மசாலா ஆகிய புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், காவல் துறை கண்காணிப்பாளர், உதவி ஆணையர் வணிகவரித்துறை, சிவகாசி மற்றும் விருதுநகர் சுகாதார துறை, மாவட்ட சமூக நல அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் கொண்ட நியமன மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில், தடை செய்யப்பட்ட பொருள்களின் விற்பனையை தடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் விருதுநகர் நகராட்சி அலுவலக சாலைப் பகுதிகளில் உள்ள கடைகளில் இக்குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு சில கடைகளில் குட்கா மற்றும் பான் மசாலா பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. எனவே ரூ.6 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது. இப்பொருள்களை உட்கொள்வதால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், இதை குறிப்பிட்ட வயதிற்குட்பட்டர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் உபயோகிக்க கூடாது. இது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள வழங்கப்படுவதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.