புதுவையில் கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்தபோது தவறி விழுந்ததில் விஷவாயு தாக்கி 2 ஊழியர் இறந்தனர். இதுதொடர்பாக மஸ்தூர் மேற்பார்வையாளரை கைது செய்த போலீஸார் தலைமறைவான ஒப்பந்ததாரரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் சில நாட்களாக பராமரிப்பு பணி நடைபெற்றது. இதில் முதலியார்பேட்டை அனிதாநகர் உதயகுமார் (40), கரிக்கலாம்பாக்கம் ஜெகதீசன் (40), அன்பழகன், மகாலிங்கம், சங்கர், அந்தோணிசாமி, சுரேஷ் ஆகிய 7 மஸ்தூர் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சனிக்கிழமை மாலை உதயகுமார் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் கழிவுநீர் உந்து கிணற்றில் இறங்கி சுத்தம் செய்தபோது பைப் லைனில் இருந்த உதயகுமார் தவறி விழுந்தார். உதயகுமாரை காப்பாற்ற ஜெகதீசன் முயற்சித்த போது அவரும் உள்ளே விழுந்தார்.
இதில் விஷவாயு தாக்கி 2 பேரும் உயிரிழந்தனர். மேலும் பணியில் ஈடுபட்டிருந்த அன்பழகன், மகாலிங்கம், சங்கர் ஆகியோருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஸ்தூர் ஊழியர் இறந்தது தொடர்பாக கோரிமேடு போலீஸார் முத்தியால்பேட்டை பூக்கடை வீதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சிவகுரு (42), லாஸ்பேட்டையைச் சேர்ந்த மேற்பார்வையாளர் மகாலிங்கம் (62) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.
இதில் மகாலிங்கத்தை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். தலைமறைவான ஒப்பந்ததாரரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.