புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் சூப்பர் செக் ஆய்வு தொடங்கியது

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாது மணல் குவாரிகளில் தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான சிறப்புக் குழுவினர்,  2ஆவது கட்டமாக சூப்பர் செக்  ஆய்வை

News image
Updated On :7 நவம்பர் 2013, 10:31 am

முருகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாது மணல் குவாரிகளில் தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான சிறப்புக் குழுவினர்,  2ஆவது கட்டமாக சூப்பர் செக்  ஆய்வை வியாழக்கிழமை தொடங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தாது மணல் ஆலைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அரசு அனுமதியளித்த அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்ய ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதன்படி, இந்த சிறப்புக் குழுவி்ன் தலைவர் திருநெல்வேலிக்கு கடந்த 16ஆம் தேதி இரவு வந்தார். இதன் தொடர்ச்சியாக 17, 18, 19 ஆகிய தேதிகளில் 52 குவாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி,  இரண்டாவது கட்டமாக சூப்பர் செக் ஆய்வு நடைபெறும் என அறிவித்தார்.

இதன்படி, திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை வருகை தந்த அவர்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், குழுவில் இடம் பெற்றிருந்த 15 குழுக்களில் இருந்த 128 அலுவலர்களையும் போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு குவாரிகளுக்கு ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனர்.

ககன்தீப் சிங் பேடி தலைமையிலான ஆட்சியர் மு.கருணாகரன், சார்-ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் மற்றும் வருவாய்த்துறை, கனிமவளத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குட்டம், கூடுதாளை, தோப்புவிளை ஆகிய பகுதிகளில் இருந்த குவாரிகளைப் பார்வையிட்டனர். மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவு, எடுத்துள்ள அளவு, அனுமதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர விதிகளை மீறி எடுக்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றை சர்வே செய்து பதிவு செய்தனர்.இதேபோல, கரைச்சுத்து உவரி, லெவிஞ்சிபுரம், கரைசுத்து புதூர், செட்டிகுளம், கூடங்குளம், விஜயாபதி, திருவம்பலாபுரம், காரியகோவில்  ஆகிய பகுதிகளிலும் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.  வியாழன், வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலியில் ஆய்வு நடைபெறும். வெள்ளி, சனிக்கிழமைகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிடாலம், கீழ மணக்கரை, ஈசான் தங்கல், ரஸ்தா காடு ஆகிய பகுதிகளில் அனுமதியளிக்கப்பட்ட 9 குவாரிகளில் ஆய்வு நடைபெறுகிறது.

இது தொடர்பாக, ககன்தீப் சிங் பேடி கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் தாது மணல் குவாரிகளில் 2ஆவது கட்டமாக சூப்பர் செக் ஆய்வு தொடங்கியுள்ளது. ஏற்கெனவே இருந்த அலுவலர்களுக்கு பதிலாக மாற்று அலுவலர்கள் நியமித்து ஆய்வு செய்து வருகிறோம். 2 நாள்கள் இந்த ஆய்வு நடைபெறும். கன்னியாகுமரியில் நவ.8, 9 தேதிகளில் ஆய்வு நடைபெறும். மதுரை, திருச்சி மாவட்டங்களிலும் ஆய்வு முடிந்த பின்னர் அனைத்தையும் தொகுத்து முதல்வரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.