திருவண்ணாமலையில் தீபத் திருவிழா தேரோட்டம் :பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக


திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பஞ்ச ரதங்களின் வீதியுலா நடைபெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்ற தேரோட்டத்தில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, விழாவின் 7-ம் நாளான வியாழக்கிழமை (நவம்பர் 14) பஞ்ச ரதங்களின் வீதியுலா நடைபெற்றது.
விநாயகர் தேர்:
இதையொட்டி, விநாயகர் தேருக்கு அதிகாலை 5.05 முதல் 5.45 மணி வரை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, காலை 6.05 மணிக்கு கோயில் இணை ஆணையர் ந.திருமகள், நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் வலம் வந்த விநாயகர் தேர், 2 மணி நேரத்துக்குள்ளாக காலை 8 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
முருகர் தேர்:
காலை 8.10 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரோட்டம் தொடங்கியது. முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பல ஆயிரம் பக்தர்களின் கோஷத்துடன் மாட வீதிகளில் வலம் வந்த இந்த தேர், பகல் 12.05 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது.
8 மணி நேரம் வலம் வந்த மகா ரதம்:
பகல் 12.30 மணிக்கு மகா ரதம் எனப்படும் உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர் வீதியுலா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், டிஐஜி (பொறுப்பு) முருகன், காவல் கண்காணிப்பாளர்கள் ஜெ.முத்தரசி (திருவண்ணாமலை), விஜயகுமார் (வேலூர்), ராதிகா (கடலூர்), கோயில் இணை ஆணையர் ந.திருமகள், நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட, வலப்புற வடத்தை ஆண்களும், இடப்புற வடத்தை பெண்களும் பிடித்து இழுத்தனர். இருபுறமும் ஏராளமான காவலர்கள் அணிவகுத்து வர பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் நடைபெற்றது.
காலதாமதம்:
பகல் 1.50 முதல் 2.30 மணி வரை கட்டை போடுபவர்கள் உள்ளிட்ட தேரை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உணவு அருந்தச் சென்றதால் தேர் நிறுத்தப்பட்டது. பின்னர், திருவூடல் தெருவில் இருந்து பே கோபுரத் தெருவுக்குத் தேர் திரும்புவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக, சுமார் 8 மணி நேரத்துக்குப் பிறகு இரவு 8.30 மணிக்கு மகா ரதம் மீண்டும் நிலையை வந்தடைந்தது.
பராசக்தி அம்மன் தேர்:
பராசக்தி அம்மன் தேரை முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே இழுப்பது வழக்கம். அதன்படி, இரவு சுமார் 8.45 மணிக்குப் புறப்பட்ட பராசக்தி அம்மன் தேர் பாதுகாப்புப் பணியில் பெரும்பாலான பெண் காவலர்களே ஈடுபட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, புறப்பட்ட சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர்-சிறுமியர் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் வெள்ளம்:
மொத்தத்தில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கிய அருணாசலேஸ்வரர் கோயில் தேரோட்டம், வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இவ் விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் நடைபெற்ற தேரடி வீதி, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் பக்தர்கள் வெள்ளம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
பாதுகாப்புப் பணியில் 2000 போலீஸார்:
தேரோட்ட பாதுகாப்புப் பணியில் வேலூர் சரக டிஜஐõ (பொறுப்பு) முருகன் தலைமையில் 4 எஸ்பிக்கள், 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 2000 காவலர்கள் ஈடுபடுகின்றனர். திருட்டு மற்றும் குற்றங்களைத் தடுக்க சீருடை அணியாத காவலர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவக் குழு:
தேருக்குப் பின்னால் 8 மருத்துவர்கள், 13 செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவுடன் 3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக் குழுவினர் மகா ரதம் புறப்பட்டபோது உடைக்கப்பட்ட தேங்காய் ஓடு விழுந்ததில் லேசான காயமடைந்த வழக்குரைஞர் ஒருவருக்கும், கட்டை போடும்போது காயமடைந்த கட்டைபோடுபவர் ஒருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...