சங்கரராமன் கொலை வழக்கு : அனைவரும் விடுதலை
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வந்த சங்கரராமன் கொலை வழக்கில், அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர், இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திரர்கள், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் சகோதரர் ரகு, பிரபல தாதா அப்பு உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த கொலை வழக்கு முதலில் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இவ்வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது எனக் கூறி வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜயேந்திரர் மனு தாக்கல் செய்தார்.
அதன் பேரில் கடந்த 2005ஆம் ஆண்டு புதுவை அமர்வு நீதிமன்றத்துக்கு சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இவ் வழக்கின் இருதரப்பிலும் வாத பிரதிவாதங்கள், சாட்சியங்கள் விசாரணை முடிந்த நிலையில், இவ் வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வந்தது.
இதற்கிடையே சங்கரராமன் மகன் ஆனந்தசர்மா வழக்கு விசாரணை தொடர்பான ஆடியோ, விடியோ கேசட் நகல் வேண்டும் எனவும், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அரசு வழக்குரைஞரை மாற்ற வேண்டும் எனவும் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அம்மனுக்கள் அனைத்தையும் ஆனந்தசர்மா வாபஸ் பெற்றுக் கொண்டார். கடந்த 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான அவர் தீர்ப்பு அளிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து நவம்பர் 27-ஆம் தேதி சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும் ஆஜராக வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சி.எஸ்.முருகன் உத்தரவிட்டார்.
வழக்கு கடந்துவந்த பாதை...
இவ்வழக்கில், மொத்தம் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 370 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
24 பேர் குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். இவர்களில் கதிரவன் என்பவர் சென்னையில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
கடந்த 28.10.2005-ல் இருந்து 8 ஆண்டுகளாக புதுவை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மொத்தம் 370 சாட்சிகளில் 187 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியன், சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...