திருக்கோவிலூர் வட்டத்தில் மொத்தமுள்ள 117 கிராம நிர்வாக அலுவலக பணியிடங்களில் தற்போது சுமார் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் குறிப்பாக வி.ஏ.ஓ.க்கள் எந்த கிராமத்தில் பணிபுரிகிறார்களோ, அதே கிராமத்தில்தான் வசிக்க வேண்டும் என்று அரசு விதியும், நீதிமன்ற உத்தரவும் உள்ளது. கிராமங்களில் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு, இறப்புப் பதிவு, ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ் விநியோகம், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்புமிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ.க்கள் உள்ளனர்.தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்ய முடியும். ஆனால், இப்பகுதியில் மிகப் பெரும்பாலான வி.ஏ.ஓ.க்கள் நகர்ப் புறத்தில் வீடு மற்றும் விடுதிகளில் வாடகை எடுத்து தங்கி வருகின்றனர்.