/

பழனி அருகே 8ம் வகுப்பு தேர்வை புறக்கணித்த மாணவர்கள். மதியத்திற்கு மேல் தேர்வு எழுதினர்.

பழனி அருகே 8ம் வகுப்பு தேர்வை புறக்கணித்த மாணவர்கள் மதியம் மேல் தேர்வுகளை எழுதினர்.

News image
Updated On :3 ஏப்ரல் 2014, 2:17 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே 8ம் வகுப்பு தேர்வை புறக்கணித்த மாணவர்கள் மதியம் மேல் தேர்வுகளை எழுதினர்.

பழனி அருகே புங்கமுத்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியருக்கும், ஆங்கில ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் இரு ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளால் வேறு வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். 

இதில் ஒருவரான ஆங்கில ஆசிரியர் லட்சுமணக்குமார் மேல்கரைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த ஆங்கில ஆசிரியர் அரவிந்த்ராஜா புங்கமுத்தூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு  மாற்றப்பட்டார்.

 இதைத் தொடர்ந்து அரவிந்த்ராஜாவை காரணமின்றி இடமாறுதல் செய்யக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் தொப்பம்பட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கடந்த சிலதினம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் ஆசிரியர் அரவிந்த்ராஜா மருத்துவ விடுப்பு எடுத்த நிலையில் ஆசிரியர் லட்சுமணக்குமார் மேல்கரைப்பட்டி பள்ளியில் பணியில் சேர்ந்து புதன்கிழமை வேலைக்கு சென்றுள்ளார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதியத்துக்கு மேல் மாணவர்களின் பெற்றோர் மாணவர்களை வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். 

இப்பள்ளியில் 135 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். வியாழக்கிழமை 6,7,8 வகுப்புகளை சேர்ந்த 55 பேருக்கு பள்ளி இறுதித் தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வை யாரும் சந்திக்காமல் புறக்கணித்ததைத் தொடர்ந்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சிவானந்தம் சம்பவ இடத்துக்கு சென்று பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 ஆசிரியர் லட்சுமணக்குமாரை பார்த்தது கூட இல்லாத நிலையில் அவரைப் பற்றி சிலர் கிளப்பிய புரளியால் பெற்றோர்கள் அவரை வேண்டாம் என தெரிவித்ததோடு, வேறு எந்த ஆசிரியரை வேண்டுமானாலும் நியமனம் செய்யுங்கள் என தெரிவித்தனர்.  தேர்தல் நேரம் என்பதால் அதற்கு வழியில்லை என தெரிவித்த கல்வி அலுவலர் தேர்தல் முடிந்த பின் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து காலையில் நடக்க இருந்த தமிழ் தேர்வு மதியம் நடைபெற்றது. 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கல்வி ஆர்வலர் தெரிவித்ததாவது,  ஆசிரியர் அரவிந்த்ராஜா இதே பள்ளியில் கடந்த ஐந்து வருடமாக பணியாற்றி வருபவர். தற்போது மாணவர்களிடையே புதிய கல்வித்திட்டத்தின்படி 8ம் வகுப்பு வரை யாரையும் தேர்வில் பெயிலாக்க மாட்டார்கள் என்ற அரசின் கொள்கை மாணவர்களையும், பெற்றோர்களையும் இப்படி மாற்றி விட்டது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.