கேரளத்தில் சரக்கு படகில் வேலைக்கு சென்று மாயமானவர்களை மீட்டுத்தர வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் முதுநகர் ஏணிக்காரன்தோட்டம் சுனாமிநகரை சேர்ந்தவர் முருகன்(43). இவரும் அக்கரைக்கோரியை சேர்ந்த கோவிந்தன் மகன் மனோகரன் (35). இவர்கள் 2 பேரும் கேரளா மாநிலத்தில் சரக்கு படகில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 4ஆம் தேதி அரபிக்கடலில் உள்ள ஆக்கத்தி தீவில் இருந்து கேரளா மாநிலம் வைப்பூருக்கு சுமார் 50 டன் எடையுள்ள கொப்பரை தேங்காய்களை ஏற்றிக்கொண்டு சென்றனர்.
அவர்களுடன் கேரளாவை சேர்ந்த 3 பேரும் உடன் சென்றனர். ஆனால் அவர்கள் இதுவரை வைப்பூருக்கு திரும்பிவரவில்லை. 8 நாட்கள் ஆகியும் அவர்கள் பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடலூரில் உள்ள அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த துயரத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் முருகன் மனைவி முத்துலட்சுமி, மனோகரன் தம்பி விவேக் ஆகிய 2 பேரும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிராலோஷ்குமாரிடம் அண்மையில் மனு அளித்தனர். அதில், கேரளாவுக்கு சரக்கு படகில் வேலைக்கு சென்ற முருகன், மனோகரன் ஆகிய 2 பேரையும் மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கையெடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.