திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 13,251 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு திங்கள்கிழமை கணினி குலுக்கல் முறையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 பேரவைத் தொகுதிகள் உள்ளன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ராதாபுரம், நான்குனேரி ஆகிய 6 பேரவைத் தொகுதிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலும், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 4 தொகுதிகள் தென்காசி மக்களவைத் தொகுதியிலும் உள்ளன.
மொத்தமுள்ள 2707 வாக்குப்பதிவு மையங்களில் பணி செய்ய 13,251 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல் கட்டமாக பணியிடம் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் தேர்வு பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன் தலைமையில் கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணியிடம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மனோஜ்குமார் (திருநெல்வேலி), விவேக்பிரதாப்சிங் (தென்காசி), தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் பி. உமாமகேஷ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை வரும் ஏப். 16 ம் தேதி நடைபெறும் முதல் கட்டப் பயிற்சி முகாமில் வழங்கப்படும். ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) சாமுவேல், ஆர்ஹாரிஸ் (நதிநீர் இணைப்பு), துரைராஜன் (பொது), மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன், தேர்தல் வட்டாட்சியர் பால்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.