வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெறவுள்ளதால், சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் சீலிட்டு வைக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் புதன்கிழமை காலை அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. சிதம்பரம் உதவிஆட்சியரும், சிதம்பரம் உதவித் தேர்தல் அதிகாரியுமான எம்.அரவிந்த், தேர்தல் பார்வையாளர் (செலவினங்கள்) அபிஷேக் ஆனந்தராவ், புவனகிரி உதவித் தேர்தல் அதிகாரி தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் சீல் திறக்கப்பட்டு சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 239 வாக்குச்சாவடிகளுக்கும், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 274 வாக்குச்சாவடிகளுக்கும் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகத்திலிருந்து வேன் மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் எழுதுபொருள்கள், மை, ஆவணங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. அதேபேன்று காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 236 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் எழுதுபொருள்கள், மை மற்றும் ஆவணங்கள் அனுப்பப்பட்டன.