ஸ்ரீவில்லிபுத்தூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெயரளவிற்கு பெய்து வந்தபோதும், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மழையே இல்லை. இதனால் குளங்கள், கண்மாய்கள்


ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக போதுமான மழை பெய்யாததால் பொது மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறார்கள்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெயரளவிற்கு பெய்து வந்தபோதும், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மழையே இல்லை. இதனால் குளங்கள், கண்மாய்கள் வறண்டு நிலத்தடி நீர்மட்டும் குறைந்து ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால் வீடுகளில் பயன்பாட்டிற்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்பட்டு வந்த நீர் முற்றிலும் நின்றுபோய், தனியார் டேங்கர்களில் விநியோகிக்கும் தண்ணீரை வீடுகளுக்கு வாங்க வேண்டியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்புவரை தண்ணீர் டேங்கர் போன் போட்டவுடன் வரும். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு முன்பே சொன்னால்தான் மறுநாள் டேங்கர் தண்ணீர் வரும். மேலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் 1500 லிட்டர் தண்ணீர் ரூ.160, அது தற்போது ரூ.170, 180 என அதிகமாகி தற்போது ரூ.200 ஆகும்.இது குறித்து டேங்கர் தண்ணீர் விநியோகிக்கும் கு.குருசாமி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
முன்பு 4 ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து டேங்கரில் தண்ணீர் பிடிப்போம். இதில் 3-ல் தற்போது தண்ணீர் இல்லை. ஒரு ஆழ்துளைக் கிணற்றில் காலையில் போய் வண்டியை வரிசையில் போட்டால், மாலை தான் தண்ணீர் பிடிக்க முடிகிறது என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க நாள் ஒன்றுக்கு 68 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. செண்பகத்தோப்பு பகுதியில் இருந்து 5 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. தாமிரபரணி நீர் சராசரியாக 40 லட்சம் லிட்டர் கிடைக்கிறது. இதனை நகரின் 33 வார்டுகளுக்கும் பிரித்து விநியோகிக்க வேண்டியுள்ளது. பல கி.மீ. தூரத்திலிருந்து வரும் தாமிரபரணி நீர் வரும் பாதையில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு விட்டால் அதனை வெகு தூரம் சென்று சரி செய்ய வேண்டியுள்ளது. இதில் சில நாட்கள் காலதாமதம் ஏற்பட்டால் குடிநீர் விநியோகிக்கும் நாட்கள் பிந்துகிறது. மேலும் மின்தட்டுப்பாடு இருந்தால் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் ஏற்ற இயலாமல் போய்விடுகிறது. இவ்வாறு நடைமுறையில் பல பிரச்னைகள் இருக்கும் சூழ்நிலையில் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்று பரவலாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இது குறித்து நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரியிடம் வெள்ளிக்கிழமை கேட்டபோது, அவர் கூறியதாவது:
கடந்த 3 நாட்களாக தாமிரபரணி நீர் வராததால், குடிநீர் விநியோகம் பிந்தியுள்ளது. நகராட்சி நிர்வாகம், பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கொடுக்க ஆவலாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை கொடுத்து அலுவலர்கள் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் இயற்கை ஒத்துழைக்கவில்லை. இறைவன் மனது வைத்து நம் பகுதியை கண்ணோக்கிப் பார்த்து மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாடு நிரந்தரமாக தீரும். பொதுமக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது கிடைக்கும் நீர் நகர் முழுமைக்கும் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...