பழனி அருகே மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடுகள் மர்மமான முறையில் பலி
பழனி அருகே புதுஆயக்குடியில் மேய்ச்சலுக்கு சென்ற நான்கு எருமை மாடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து பலியாகின. வாடிப்பட்டி அருகே பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மர்ம நோயால்


பழனி அருகே புதுஆயக்குடியில் மேய்ச்சலுக்கு சென்ற நான்கு எருமை மாடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து பலியாகின. வாடிப்பட்டி அருகே பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மர்ம நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விளைநிலங்கள் இருப்பதால் பலரும் கறவை மாடுகளை வளர்த்து பால்விற்பனை செய்கின்றனர். பழனி அருகே புதுஆயக்குடியை சேர்ந்தவர்கள் கருப்புச்சாமி, நாகராஜ். இவர்கள் பால்கறவைக்காக எருமைமாடுகளை வளர்த்து வருகின்றனர். தினமும் காலையில் மேய்ச்சலுக்காக மாடுகளை தாமரைக்குளம் அருகே உள்ள நிலங்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற கருப்புச்சாமியின் ஒரு எருமையும், சந்தனம்மாளின் மூன்று எருமைகளும் தனியார் வயலில் சுமார் 100 அடிதூர இடைவெளியில் அடுத்தடுத்து இறந்து கிடந்தது.
மாடுகள் வயிறு உப்பியும், மூக்கு,காதுகளில் இரத்தம் வழிந்தும் கிடந்தது. இதைப்பார்த்த எருமைமாடுகளின் உரிமையாளர்கள் ஆயக்குடி கால்நடை மருத்துவமனைக்கு சென்று உதவி மருத்துவர் மருதுபாண்டியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர் பிரேதபரிசோதனை செய்ததில் அவற்றின் வயிற்றில் பாலித்தீன்கள் இருப்பதை கண்டறிந்தார். மேலும், இறந்த மாடுகள் கடும் வெயிலினாலோ அல்லது தண்ணீர் இல்லாததாலோ தாகத்தால் இறந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அருகே இருந்த வயல்பகுதிகளில் வெண்டை, தக்காளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்திருந்தனர். இதில் ஏதாவது மருந்து தெளித்திருந்து அவற்றை சாப்பிட்டு மாடுகள் இறந்திருக்கலாமோ என்று வந்திருந்தவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
அதே போல பழனி அருகே ஆர்.வாடிப்பட்டியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாடுகள் காணை நோயால் பாதிக்கப்பட்டது போன்ற அடையாளங்கள் இருந்ததால் தகவலறிந்த நெய்க்காரபட்டி கால்நடை மருத்துவர் நளினி தலைமையில் ஏராளமான மருத்துவர்கள் அங்கு சென்று சிகிச்சை மேற்கொண்டனர். அங்கு மேலும் ஏராளமான மாடுகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சிலவாரங்கள் முன்பு பழனி அருகே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் அடுத்தடுத்து வயிறு உப்பி இறந்தது குறிப்பிடத்தக்கது.
மாடுகள் இறப்பு குறித்து கால்நடை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது, இறந்த மாடுகள் கடும் வெயிலில் மேய்ச்சல் மேற்கொண்டு தண்ணீர் இன்றி இறந்திருக்கலாம். இவற்றிற்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது.ஆகவே, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் போது அவ்வப்போது தண்ணீரும் வைக்க வேண்டும். நிழலான இடத்தில் கட்டிப்போட வேண்டும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...