பழனியில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பை பயன்பாடு. நிலத்தடி நீருக்கு கேடு
பழனியில் தினமும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


பழனியில் தினமும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோயில் நகரான பழனிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர். பக்தர்களுக்கு வேண்டிய தேங்காய்,பழம் போடவும், பிரசாதப் பொருட்கள் வழங்கவும் கடைகளில் பிளாஸ்டிக் கேரிபைகளே பயன்படுத்தப்படுகிறது. மேலும், நகர் பகுதிகளில் மளிகை, பழங்கள் விற்கும் கடைகளிலும், பிளாட்பார உணவு விடுதிகளில் இலைக்கு பதில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பேப்பரும் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பழனியில் தினமும் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் வரப்பெறுகிறது. இவை நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்பட்டு அவை காற்றில் வீதி முழுக்க பரவி நிலத்தில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தில் கீழே செல்லும் பிளாஸ்டிக் பைகள் தண்ணீரை கீழே செல்லவிடாமல் தடுத்து நிலத்தடி நீர் பாதிக்க முக்கிய காரணியாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில் கடைகள், பிளாட்பாரக் கடைகள் அனைத்திலும் கேரிபைகளுக்கு பதில் துணிப்பைகள் வழங்கும்முறை நடைமுறைக்கு வந்தது. இதனால் நகராட்சி உரக்கிடங்கில் பாலித்தீன் வரத்து குறைந்தது. சுற்றுச்சூழலும் பெருமளவு காப்பாற்றப்பட்டது.
சுற்றுச்சூழல் நிர்வாகமும் துணிப்பைகள் அவசியத்தை உணர்த்தும் விதமாக கோயில் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தது. ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. தற்போது நகராட்சி ஆணையர் இல்லாத நிலையில் நகரில் பாலித்தீன் பயன்பாட்டை யாரும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. காணும் இடமெல்லாம் டீக்கடைகள், பேன்சிகடைகள், ஸ்வீட் ஸ்டால்கள், தள்ளுவண்டிகள் என அனைத்திலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கேரிபைகள், பாலித்தீன் பேப்பர்கள் நிறைந்து கிடக்கிறது.
நகர்நல அலுவலரோ, நகராட்சி சுகாதார அலுவலர்களோ யாரும் கண்டுகொள்ளாததால் நகரின் மையத்தில் உள்ள வையாபுரி குளத்தில் தினமும் அதிகளவு பாலித்தீன் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வையாபுரி குளம் பெருமளவு மாசடைந்து வருவதோடு நிலத்தடி நீர் மட்டத்துக்கும் ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, மாவட்ட ஆட்சியர் கோயில் நகரான பழனியின் நலன் கருதி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதித்தும், பிளாஸ்டிக் கேரிபைகை பறிமுதல் செய்தும் நகரின் நலன் காக்க நகராட்சிக்கு உத்திரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...