அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்த கொத்தனாரின் வாரிசுதாரருக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.7.25 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
ராஜபாளையம், ராஜூக்கள் கல்லூரி எதிரேயுள்ள ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் கொத்தனார் தெய்வேந்திரன் (30). 2.5.08-ம் தேதி தெய்வேந்திரன் வேலை முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆட்டோ ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, நெல்லை பணிமனைக்குச் சொந்தமான அரசு போக்குவரத்குக் கழக பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் வந்த தெய்வேந்திரன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
மேலும் இருவர் காயம் அடைந்தனர். தெய்வேந்திரனின் வாரிசுதாரரான மனைவி கனகலட்சுமி (20), தந்தை கருப்பையா (60), தாய் பாப்பா (52) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், நெல்லையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகம், உயிரிழந்த தெய்வேந்திரனின் வாரிசுதாரருக்கு ரூ.7.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.