/

பழனி அருகே அமராவதி ஆற்றில் பாறையில் தங்கியிருந்த முதலையால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவில் அமைந்துள்ளது அமராவதி அணைக்கட்டு. இந்த அணைக்கட்டின் அருகே தமிழக அரசின் முதலைப்பண்ணை உள்ளது.  இதில் சிறிய பல்லி போன்ற

News image
Updated On :24 டிசம்பர் 2014, 1:38 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே அமராவதி ஆற்றில் பாறை மீது படுத்திருந்த முதலையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவில் அமைந்துள்ளது அமராவதி அணைக்கட்டு. இந்த அணைக்கட்டின் அருகே தமிழக அரசின் முதலைப்பண்ணை உள்ளது.  இதில் சிறிய பல்லி போன்ற முதலைக்குட்டி முதல் பிரமாண்டமான அளவுள்ள முதலைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது இதில் உள்ள முதலைக்குட்டிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளுக்கு சென்று விடுகிறது.  பழனியை அடுத்த சாமிநாதபுரம் அருகே அமராவதி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அமராவதி ஆறாக செல்கிறது.  இந்த ஆறு திருப்பூர் மாவட்டத்தில் பலநூறு ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. 

இந்நிலையில் சாமிநாதபுரம் பகுதியில் செல்லும் அமராவதி ஆறில் சுமார் ஐந்து முதலைகள் அவ்வப்போது தென்படுவதாக ஆற்றோரப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் பொதுப்பணித்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படைக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர்.  எனினும் சம்பந்தப்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றபோதும், பிடிக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் அந்த முதலைகள் பிடிபடவில்லை. தற்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்லும் நிலையில் மீண்டும் முதலைகள் ஆங்காங்கு தென்படவே பொதுமக்கள் ஆற்றில் நீராடவோ, துணிகள் துவைக்கவோ செல்ல அஞ்சியுள்ளனர்.  கடந்த சில தினங்களாக ஆற்றோரம் மேய்ச்சலுக்கு சென்ற சில கால்நடைகள் காணாமலும் போயுள்ளன. 

இந்நிலையில் புதன்கிழமை மதியம் ஆற்றோரம் துணி துவைக்க சென்ற சிலர் புஷ்பத்தூர் பகுதிக்கு தண்ணீர் எடுக்கும் மோட்டார் அறைக்கு சிறிது தொலைவில் இருந்த பாறையில் சுமார் ஏழு முதல் எட்டு அடிவரை நீளமுள்ள முதலை ஒன்று படுத்திருப்பதை பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து புஷ்பத்தூர் ஊராட்சி தலைவர் சண்முகராஜ் பழனி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  சம்பவ இடத்துக்கு வனத்துறை அலுவலர்கள், கிராமமக்கள் என பலரும் வந்து குவிந்த நிலையில் பாறையில் படுத்திருந்த முதலை யாரையும் கண்டு கொள்ளாமல் பலமணி நேரம் உறங்கிக்கொண்டு இருந்தது.  சிலர் மட்டுமே முதலை பற்றி தெரிவித்த நிலையில் புதன்கிழமை ஒரு ஊரே வந்து பார்த்த நிலையில் முதலை சிறிது நேரம் கழித்து ஆற்றில் மூழ்கி மறைந்தது. 

இதுகுறித்து புஷ்பத்தூர் ஊராட்சி தலைவர் சண்முகராஜ் தெரிவித்ததாவது, அமராவதி ஆற்றில் பல மாதங்களாக முதலைகள் இருந்து வருகிறது.  ஊராட்சி மூலம் அது இருக்கும் இடத்தில் தண்ணீரை இறைத்து தேடும் போது அது வேறு இடத்துக்கு சென்று விடுகிறது. ஆற்றில் சிறிது தொலைவில் பெரியஅளவில் குகை போன்ற பகுதியை முதலை தேர்வு செய்து அங்குதான் தங்குவதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். ஆகவே, வனத்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் உடனடியாக குளத்தில் சுற்றித்திரியும் முதலைகளை பிடித்து பண்ணைக்கு கொண்டு செல்ல வேண்டும்.  தவிர, ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்றும், ஆற்றோரம் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் என்றும் முன்னரே கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.  பழனி வனத்துறை அலுவலர்கள் இதுகுறித்து கூறும்போது, ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.  எத்தனை முதலை இருக்கிறது என்றும் தெரியவில்லை.

இதை பிடிக்கும் சிறப்புப்படை அமராவதி வனப்பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ளது. அவர்களுக்கு தகவல் தெரிவித்து பின் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.  அமராவதி ஆறு திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் செல்வதால் இரு மாவட்ட நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருவது இப்பகுதி மக்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆகவே, முதலை விஷயத்தில் இரு மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராம மக்கள் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.