/

பழனியில் முறைகேடு செய்யப்பட்ட மின்னணு தராசுகள், எடைக்கற்கள், அளவைகள் பறிமுதல்

பழனியில் தொழிலாளர் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் மின்னணு தராசுகள், எடைக்கற்கள், அளவைகள் ஆகியன நூற்றுக்கணக்கில் பறிமுதல்

News image
Updated On :26 டிசம்பர் 2014, 2:35 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் தொழிலாளர் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் மின்னணு தராசுகள், எடைக்கற்கள், அளவைகள் ஆகியன நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

     பழனிக்கோயிலில் தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் தைப்பூச பக்தர்கள் சீசன் துவங்கியுள்ள நிலையில் தினமும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தர துவங்கியுள்ளனர்.  இந்நிலையில் பக்தர்கள் ஏமாற்றும் நோக்கோடு வணிகர்கள் ஈடுபடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சென்னை தொழிலாளர் ஆணையர் அமுதா, மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் உத்திரவின் பேரிலும், திருச்சி இணை ஆணையர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் தொழிலாளர் துணை ஆணையர் அறிவுரையின் பேரில் திண்டுக்கல் தொழிலாளர் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் பழனி தொழிலாளர் துணை ஆய்வாளர் வெங்கடாஜலபதி, தொழிலாளர் உதவி ஆய்வர்கள் முருகவேல், கணேசன், ராஜமுருகன், சின்னையன், சரவணக்குமரன், முத்திரை ஆய்வர் சுப்பையன் உள்ளிட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பழனி அடிவாரம், சன்னதி ரோடு, பேருந்து நிலையம் பகுதிகளில் சட்டமுறை எடையளவுச்சட்டத்தின் கீழ் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

 எடையளவு உரிய காலத்தில் மறுமுத்திரையிடாமல் வியாபார நோக்கத்தில் வைத்திருந்த தெரு வியாபாரிகளிடமிருந்து 23 மேஜைத் தராசு மற்றும் விட்டத்தராசும், வணிகர்களை ஏமாற்றும் வகையில் முறைகேடு செய்திருந்த ஆறு தராசுகளும் உரிய காலத்தில் முத்திரையிடாத 45 எடைக்கற்களும், 40 அளவைகளும் பொதுபறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பொட்டலப் பொருட்களை குறிப்பிட்ட எடைக்கு குறைவாக பொட்டலமிட்டு விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களும், உரிய காலத்தில் முத்திரையிடப்படாத இரண்டு மின்னணு தராசுகளும் நுதர்வோரை ஏமாற்றும் வகையில் கடைகளில் இருந்து நான்கு மின்னணு தராசுகளும் ( இரண்டு கிலோ எடை வைத்தால் மூன்று கிலோ காட்டும் வகையில் இருந்தது) பறிமுதல் செய்யப்பட்டது.

 இதுகுறித்து ஆய்வாளர் ராஜ்குமார் கூறுகையில், உரியகாலத்தில் முத்திரையிட்டு பயன்படுத்த கடைக்காரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முத்திரையிடப்படாத எடையளவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் முதல் குற்றத்துக்கு ரூ.5 ஆயிரமும், இரண்டாவது குற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்  அல்லது ஆறுமாத சிறைதண்டனையும் விதிக்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  மேலும் பொட்டலப்பொருட்கள் விதியின் படி விற்பனை செய்யும் வணிகர்கள் தயாரிப்பாளர் பெயர், முகவரி, புகார் செய்ய தொலைபேசி எண், பொட்டலமிடப்பட்ட தேதி, அதிகபட்ச விற்பனை விலை ஆகியன அச்சிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.