கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி குறித்து அண்ணாமலைப் பல்கலை. வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு
நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடைமணல் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாழி குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடைமணல் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாழி குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது எடைமணல் கிராமம். இந்த கிராமம் 64 ஏக்கர் பரப்பளவில் பண்பாட்டு மேடாக கிழக்கு-மேற்கு நோக்கி உள்ளது. தற்போது அங்கு இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட சுமார் 10 அடி தோண்டு போது பல்வேறு பெருங் கற்காலத்து முதுமக்கள் தாழிகள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவைகள் கி.மு 3-ம் நூற்றாண்டு காலத்திலானது. இதற்கு முன்பு மக்கள் வாழ்ந்த இப்பகுதியில் கடல்சீற்றத்தில் அழிவுற்று மணல்மேடாக ஆகியுள்ளது. தற்போது எடைமணல் என்ற பெயரில் பண்பாட்டு மேடாக அமைந்துள்ளது இந்த கிராமம்.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர்களும், தொல்லியல் ஆய்வாளர்களுமான ஜே.ஆர்.சிவராமகிருஷ்ணன், பி.கலைச்செல்வன், எஸ்.கண்ணன், முனைவர் காந்திராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முதுமக்கள் தாழிகள் ஆய்வு குறித்து வரலாற்று ஆய்வாளர் ஜே.ஆர். சிவராமகிருஷ்ணன் தெரிவித்தது: எடைமணல் கிராமத்தில் 10 அடிக்கு மேல் விளக்குகளின் ஓடுகள், தாணிய மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தைச் சேர்ந்த மஞ்சள், கருப்பு, பச்சை, ஊதா உள்ளிட்ட வண்ணங்களில் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து அவர்களது விருப்பமான உணவை பாணைக்குள் வைத்து உடலுடன் அடக்கம் செய்யும் பழக்கம் இருந்துள்ள தெரியவந்துள்ளது.
பாணைக்குள் கறுப்பு, சிகப்பு வண்ணம் கலந்த சிறிய மட்பாண்டங்களில் இறந்தவரின் விருப்பமான உணவை வைத்து மூடி வைத்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. சமயகுருமார்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு அதனை வேறுபடுத்தி காட்டுவதற்கு அந்த உணவு வைக்கப்பட்ட பாணையில் சிகப்பு வண்ணங்களில் மரத்தின் உருவத்தை ஓவியமாக வரைந்துள்ளனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பழங்காலத்திலிருந்தே சிகப்பு நிறத்தை மங்கல காரியத்திற்கு பயன்படுத்தி வரும் வழக்கம் உள்ளது. ஆனால் அதற்கு மாறாக இங்கு சிகப்பினை அமங்கலத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. மேலும் உடைந்த வெங்கல கிண்ணம், செம்பு கலந்த ஈட்டி, வால் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்போதே செம்பு மற்றும் வெங்கலத்தை பயன்படுத்தியுள்ளதை இவைகள் காட்டுகிறது. மேலும் மொழி உருவாகாத காலத்தில் சிந்து சமய வெளி நாகரீகத்தில் குறியீடுகளை பயன்படுத்தியுள்ளனர். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மட்பாண்டங்களில் வரையப்பட்டுள்ள திரிசூல குறியீடுகள் அதனை உறுதிபடுத்துகின்றன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஜே.ஆர்.சிவராமகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...