மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து தஞ்சையில் ஜன. 9 ம் தேதி நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கட்சியின் மாநில செயற்குழு,
பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 9 ம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சையில் வைத்து நடைபெறுகிறது. மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிலைபாடு, கூட்டணி அமைப்பது குறி்த்து முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் குரூப் 1 தேர்வில் வயது வரம்பு சலுகை குறித்த மாணவர்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு்ள்ளது. குரூப் 1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30 ஆகவும், பிற அனைத்து பிரிவினருக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு எழுதுவோரில் 50 சதவிகிதத்தினர் கிராமப்புற மாணவர்கள். குரூப் 1 தேர்வு ஆண்டுதோறும் நடத்துவதில்லை.
கடந்த 13 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, பீகார் போன்ற மாநிலங்களில் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக உள்ளது. ஆகவே தமிழகத்திலும் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்.