/

நாடாளுமன்றத் தேர்தல்: கடலூர் மாவட்டத்தை குறி வைக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் (தனி) ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த இரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வத்துடன்

News image
Updated On :22 ஜனவரி 2014, 11:35 am

ஜி.சுந்தரராஜன்

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் கடலூர் மாவட்டத்தில் போட்டியிட குறிவைத்து ஆர்வத்துடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் (தனி) ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த இரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வத்துடன் அதற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றார். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றார்.

தற்போது திமுக கூட்டணியில் இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிட இரு அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வத்துடன் முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் திமுக கூட்டணியில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். இதே தொகுதியில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜா போட்டியிட முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் திமுக தலைமை வன்னியர், ஆதிதிராவிடர் சமூகத்தினர் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டால் வன்னியர் வாக்குகளை பெற முடியாது என்பதால் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை திருமாவளவனுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ ஐயப்பனும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவருமான ஏ.அருண்மொழிதேவனும் முயற்சித்து வருகின்றனர். கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தற்போதைய எம்பியாக உள்ள கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் எனக்கட்சி வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த முன்னாள் எம்பி இ.பொன்னுசாமி மீண்டும் அதிமுக சார்பில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருமுறை வெற்றி பெற்று எம்பியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட டாக்டர் ப.வள்ளல்பெருமான் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

 பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட கட்சி சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமியும், சிதம்பரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் போட்டியிட குன்னத்தைச் சேர்ந்த கே.கோபாலகிருஷ்ணன் என்பவரையும் அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.