/

30 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் திருப்பாற்கடலில் தீர்த்தவாரி உற்சவம்

சிதம்பரம் நகரில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் தசதீர்த்தங்களில் ஒன்றான திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜன.30-ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்தை நடத்த இந்து ஆலய பாதுகாப்புக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2014, 12:23 pm

சிதம்பரம் நகரில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் தசதீர்த்தங்களில் ஒன்றான திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜன.30-ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்தை நடத்த இந்து ஆலய பாதுகாப்புக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.

சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்காவசக பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க இடமான சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ளது ஆவுடையார் கோயில். இக்கோயிலை மாணிக்கவாசகர் கட்டி, அங்கியே தங்கியிருந்து வழிபட்டு வந்துள்ளார். அவருக்கு முன்பே அங்கு  பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் பர்ணசாலை அமைத்து தங்கியிருந்து தவம் செய்த இடமாகும். அக்கோயிலில் உபமன்யு என்ற முனிவருக்காக தில்லைக்கூத்தன் ஸ்ரீநடராஜப்பெருமான் திருப்பாற்கடலை உருவாக்கினான் என வரலாறு கூறுகிறது.

இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளது: ஆக்கிரமிப்பில் இருந்த இச்சிறப்பு வாய்ந்த தீர்த்தகுளத்தின் ஒரு பகுதி தூர் வாரப்பட்டு இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினரின் கட்டுப்பாட்டில் 2013 அக்டோபர் மாதம் முதல் உள்ளது. இந்நிலையில் திருப்பாற்கடலில் தீர்த்தவாரி உற்சவத்தை தமிழ் வருடமான ஜயவருடம் முதல் மீண்டும் தொடங்க பொதுதீட்சிதர்களை இந்து ஆலய பாதுகாப்புக்குழு கேட்டுக் கொண்டது. தற்போது பொதுதீட்சிதர்கள் இந்த ஆண்டு முதல் தசதீர்த்தங்களிலும் தீர்த்தவாரியினை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

இதனை முன்னிட்டு தசதீர்த்தங்களில் முதன்மையான திருப்பாற்கடல் தீர்த்தத்தில் வருகிற ஜன.30-ம் தேதி வியாழக்கிழமை தை அமாவாசை அன்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் தீர்த்தவாரி உற்சவத்தை பொதுதீட்சிதர்கள் நடத்த முடிவு செய்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் இந்த சிறப்பு வாய்ந்த தீர்த்தவாரி உற்சவத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருள் பெற வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.