/

சிதம்பரம் நகராட்சியில் ரூ.1 கோடியே 26 லட்சம் கையாடல் வழக்கு: சிபி சிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை

சிதம்பரம் நகராட்சியில் ரூ.1 கோடியே 22 லட்சம் தொகை கையாடல் வழக்கு தொடர்பாக சென்னையிலிருந்து வந்த சிபிசிஐடி போலீஸார் சிதம்பரத்தில் முகாமிட்டு நகராட்சி மற்றும் வங்கி

News image
Updated On :28 ஜனவரி 2014, 2:06 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.1 கோடியே 22 லட்சம் தொகை கையாடல் வழக்கு தொடர்பாக சென்னையிலிருந்து வந்த சிபிசிஐடி போலீஸார் சிதம்பரத்தில் முகாமிட்டு நகராட்சி மற்றும் வங்கி ஆவணங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம் நகராட்சியில் 2011 மார்ச் மாதம், 2008-09 ஆண்டிற்கான கணக்கு தணிக்கை நடைபெற்றபோது ரூ.1 கோடி 22 லட்சத்து, 44 ஆயிரத்து 773 ரூபாய் தொகை முறைகேடு செய்யப்பட்டு வங்கி கணக்கில் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி காசாளர் எஸ்.பாலு தலைமறைவானார். தகவல் அறிந்த அப்போதிருந்த செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநர் வி.பி.தண்டபாணி சிதம்பரம் நகராட்சிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு காசாளர் எஸ்.பாலுவை தற்காலிக வேலைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். எஸ்.பாலு தலைமறைவானதால் கிராம நிர்வாக அலுவலர் முத்துநாயகம் முன்னிலையில் மாரியப்பாநகரில் உள்ள அவரது வீட்டில் தற்காலிக வேலைநீக்கம் உத்தரவு ஒட்டப்பட்டது.

பின்னர் நகராட்சி ஆணையாளர் அளித்த புகாரின் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிதம்பரம் நகரமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களின் விளைவாகவும், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கையின் விளைவாகவும் மேற்கண்ட வழக்கு சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த டிச.19-ம் தேதி சிபி சிஐடி டிஎஸ்பி கஜேந்திரவர்மன் தலைமையில் போலீஸார்  சிதம்பரம் நகருக்கு வந்து முகாமிட்டு நீதிமன்ற மாரியப்பாநகரில் உள்ள முன்ஜாமீன் பெற்றுள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காசாளர் பாலு வீட்டை சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி விட்டு சென்றனர். விசாரணையில் இவ்வழக்கில் மேலும் பலர் தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சிபி சிஐடி டிஎஸ்பி கஜேந்திரவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தலைமைக்காவலர் வேதகிருஷ்ணன் மற்றும் போலீஸார் சிதம்பரம் நகருக்கு வந்து முகாமிட்டு நகராட்சி, வங்கி ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.