/

சிதம்பரம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இறால் குட்டைகள் அமைக்கும் பணி: தடுத்து நிறுத்த கோரிக்கை

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 4 இடங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இறால் குட்டைகள் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பரங்கிப்பேட்டை

News image
Updated On :28 ஜனவரி 2014, 12:23 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 4 இடங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இறால் குட்டைகள் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.

சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் நான்கு பகுதிகளில் இறால் பண்ணைகள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கிள்ளை பகுதியில் அதிகளவில் இறால் பண்ணைகள் இருந்த காரணத்தால் அப்பகுதியில் விவசாயாம் கடுமையாக பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குகள் போடப்பட்டு சமீபத்தில்தான் அவ்வழக்குகள் முடிந்தன.

இச்சூழலில் பரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதிகளில் மீண்டும் இறால் குட்டைகள் வெட்டப்படுவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பரங்கிப்பேட்டை சூர்யா நகரில் கிள்ளை மீனவர்கள் குடியிருப்பிற்கு அருகில் இறால் குட்டை வெட்டி வருகின்றனர். தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 200 புறம்போக்கு நிலத்தில் நான்கு குட்டைகளும், பட்டா இடத்தில் ஒரு குட்டையயும் அமைத்து வருகின்றனர். இதற்கு உப்பு நீரை சேமிப்பதால் அப்பகுதி விவசாயமும், நிலத்தடி நீரையும் கடுமையாக பாதிக்கும்.

கிள்ளை குச்சிப்பாளையம் அருகில் ராதாவிளாகம் - தில்லைவிடங்கன் கிழக்கில் ஏற்கனவே இறால் குட்டை இருந்து மூடப்பட்ட இடத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் மீண்டும் இறால் குட்டையை வெட்டி வருகின்றனர். இந்த இறால் குட்டை தண்ணீர் தேக்க உயர்த்தி அணை கட்டினால் கொடிப்பள்ளம், பின்னத்தூர்,  பின்னத்தூர் கிழக்கு, தில்லைவிடங்கன், கீழசாவடி ஆகிய கிராமங்களில் தண்ணீர் வடிவது சாத்தியமற்றதாகிவிடும்.

பொன்னந்திட்டு வெள்ளாறு அருகில் இறால் குட்டை பணிகள் நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட பகுதிகளில் இறால் பண்ணைகள் வருவதால் அப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கபடும் என்பதுமட்டும் அல்ல, நிலத்தடி நீர் உவர் நீராக மாறி விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. மேலும் இந்த இறால் குட்டைகள் இதுவரை அவர்களது கழிவுகளை எங்கு வெளியேற்றுவார்கள் என்பதை ரகசியமாகவே வைத்துள்ளனர். மாவட்ட மாசுக் கட்டுபாடு துறையிடம் இன்றுவரை (28.01.2014) எவ்வித அனுமதியும் அவர்கள் பெறவில்லை. மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்து கேட்டபோது ஜன.29-ம் தேதிதான் இறால் குட்டைகள் அமைக்கப்படுவது குறித்த புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே மீன்வளத்துறையிடமும் அனுமதி வாங்கியதாக தெரியவில்லை.

அரசு புறம்போக்கு நிலங்களை வளைத்து இறால் குட்டை வெட்டிட முறையான அனுமதி இதுவரை பெறப்படவில்லை. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு மேற்கண்ட நான்கு இடங்களிலும் இறால் பண்ணைகள் அமைப்பதை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது விசாரணை நடத்திட வேண்டும் என மனுவில் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.