கிராம நிர்வாக அலுவலர்கள் நாளை முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு

சேலத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 87 பெண்கள் உள்ளிட்ட 745 பேர் கைது செய்யப்பட்டனர்.
Updated on
2 min read

சேலத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 87 பெண்கள் உள்ளிட்ட 745 பேர் கைது செய்யப்பட்டனர்.

 சேலத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட 2 கிராம நிர்வாக அலுவலர்கள், ஒரு வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் ஆகியோரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரி, கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கிராம நிர்வாக அலுவலர்கள் சேலத்துக்கு வந்திருந்தனர்.

 சேலம் மாநகராட்சியின் பழைய அலுவலகம் பின்புறம் உள்ள கோட்டை மைதானத்தில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான கிராம நிóர்வாக அலுவலர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் எந்த நேரத்திலும் மறியல், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என்பதால் மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸôர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் காவல் அளிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் போராட்டத்துக்கு திரண்டிருந்த சங்கத்தின் நிர்வாகிகளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களை வருவாய் கோட்டாட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றனர்.

 அந்த பேச்சுவார்த்தையில் பிற்பகல் 3 மணியளவில் பணி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் 3 மணிக்கு பிறகும் அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கோட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 87 பெண்கள் உள்ளிட்ட 745 கிராம நிர்வாக அலுவலர்களும் கைது செய்யப்பட்டனர்.

 இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியது:

கிராம நிர்வாக அலுவலர்களை தாற்காலிக பணி நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்தைக் கண்டித்து 10 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். பிற்பகல் 3 மணியளவில் பணி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

 அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியரே கையெழுத்திட்டு வழங்க வேண்டும். போராட்ட காலத்தையும் பணிக் காலமாக கணக்கில் கொள்ள வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை தெரிவித்திருந்தோம். முதலில் இதற்கு ஒப்புக் கொண்ட அதிகாரிகள், பின்னர் கால தாமதம் செய்யத் தொடங்கினர். எனவே மறியல் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

 நாங்கள் தமிழக அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம். இதுவரை அரசுக்கு எதிராக எந்த போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. ஆனால் மாவட்ட ஆட்சியர் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறார். கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்துக்கு தீர்வு காணும்படி வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் அறிவுரை வழங்கியும் மாவட்ட ஆட்சியர் அவற்றை மதிக்க மறுக்கிறார்.

 பணி நீக்க உத்தரவை திரும்பப் பெறும் வரையிலும், மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்படும் வரையிலும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்த கட்டமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல், மாநிலம் முழுவதிலும் சுமார் 8 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டம் கால வரம்பின்றி நடைபெறும் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com