விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை: கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால் எதிர்பார்த்தவாறு பிரதான அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. எனினும் அணைகளில் உள்ள நீர் இருப்பை கொண்டு கார் பருவ சாகுபடிக்கு

News image
Updated On :29 ஜூலை 2014, 12:02 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியி்ல் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால் எதிர்பார்த்தவாறு பிரதான அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. எனினும் அணைகளில் உள்ள நீர் இருப்பை கொண்டு கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.கடனாநதி, ராமநதி, அடவிநயினார், கருப்பாநதி அணைகள் மற்றும் பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.எனினும் தற்போதைய அணைகளின் நீர் இருப்பு கார் பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்க போதுமானதாக இல்லை. இதனிடையே அவ்வப்போது நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 3 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 2 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 7 மி.மீ மழையும், பேச்சிப்பாறை அணையில் 2.4 மி.மீ மழையும், பெருஞ்சாணி அணையில் 2.2 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 955 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 187 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 22 மி.மீ மழையும், கருப்பாநதி, மணிமுத்தாறு அணைகளுக்கு விநாடிக்கு தலா 4 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 7 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 15 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 56.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 67.58 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 56.47 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 65.25 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 34.48 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 59.50 அடியாக இருந்தது. இதேபோல் அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 87.00 அடியாகவும் இருந்தது. பாசனம், குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 1104.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு 75 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 105 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 40 கனஅடியும், கருப்பாநதி அணையில் 7 கனஅடியும், அடவிநயினார் அணையில் இருந்து 5 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.