குஷ்பு பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் :  எஸ். வானதி சீனிவாசன்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த பாஜக நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது,  தெற்காசியாவிற்கு
Updated on
2 min read

குஷ்பு பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என தமிழக பாஜக மாநில பொதுச் செயலர் எஸ். வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த பாஜக நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது,  தெற்காசியாவிற்கு தலைமை வகிக்கும் தகுதி இந்தியாவிற்கு உள்ளது என்பதை பூடான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியபோது சூசகமாக தெரிவித்துள்ளார்.  அந்த அளவுக்கு இந்தியாவை பலம்மிக்க நாடாக அவர் கண்டிப்பாக உருவாக்குவார்.

தமிழகத்தில் தேர்தலின் போது மோடி அலைவீசவில்லை என்று கூறிவிட முடியாது.  மோடி அலை வீசியதால் தான் தமிழக பாஜகவிற்கு 5.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.  பல இடங்களில் திமுக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.  திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகள், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால் வாக்குகள் சிதறிவிட்டது.  எம்பிக்களின் எண்ணிக்கையை பெறாவிட்டாலும், பாஜக கனிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை நடைமுறைபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.  தேசிய நதிநீர் இணைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ள நிலையில் காவிரி பிரச்சனையில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.  காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் எடுத்து கூறியுள்ளார்.  நல்ல தீர்வு கிடைக்குமென நம்புகிறோம்.

இலங்கை தமிழர் பிரச்சனையை பொறுத்தவரை இலங்கையில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளையும், அவர்களின் பிரச்சனைக்கும் தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.   இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகளை இந்தியா தடுக்கும்.   மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், இலங்கை அரசால் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர்.  அந்த அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளது.  குஷ்பு திமுகவிலிருந்து விலகியது அவரது சொந்த விருப்பம்.  அவர் பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம்.  யார் பாஜகவிற்கு வந்தாலும் வரவேற்போம். 

மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.   மத்திய அமைச்சர்கள் தங்கள் துறைகள் குறித்து அறிந்து கொள்ளவே சிறிது காலம் தேவை.  அதனால் மத்திய அரசுக்கு சிறிது கால அவகாசம் கொடுங்கள்.  அதுவரை பொறுத்திருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமென எஸ். வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மாநில அமைப்பு பொதுச் செயலர் எஸ். மோகன் ராஜூலு, கோட்டப் பொறுப்பாளர் ஏ.கே. இராஜேந்திரன், கோட்ட அமைப்புச் செயலர் எஸ். குணசேகரன், வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் கொ. வெங்கடேசன், பாஜக உள்ளாட்சி பிரிவு மாநில தலைவர் ஜி. வெங்கடேசன், மாநில கல்வியாளர் அணி முன்னாள் துணைத் தலைவர் எம். தீனதயாளன், மாவட்ட பொதுச் செயலர் சி. வாசுதேவன், மாவட்ட செயலர் எம். தண்டாயுதபாணி, மாவட்ட எஸ்சி அணி தலைவர் எம். குப்புசாமி, ஆம்பூர் நகர பாஜக தலைவர் எம். அன்பு, பொதுச் செயலர் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் க. சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com