காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

திறந்தவெளி சிறையில் வறட்சியைத் தாங்கும் கடலை பயிர் அறுவடை

தமிழகத்தில் சேலம், கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் திறந்தவெளி சிறைச்சாலைகள் உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஒன்றியம், புரசடை உடைப்பில் நன்னடத்தை

Updated On :20 ஜூன் 2014, 12:40 pm

திறந்தவெளி சிறைச்சாலையில் நன்னடத்தை கைதிகள் மூலம் முதன் முறையாக பயிரிடப்பட்ட நிலக்கடலை பயிர் அறுவடை ஆனது.

தமிழகத்தில் சேலம், கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் திறந்தவெளி சிறைச்சாலைகள் உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஒன்றியம், புரசடை உடைப்பில் நன்னடத்தை கைதிகளுக்காக 84 ஏக்கர் பரப்பளவில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை தான் மாநிலத்திலேயே அளவில் பெரியது. இந்த சிறைச்சாலையை கடந்த சில மாதங்களுக்கு முன் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

பிற சிறைகளில் தண்டனை காலத்தைப் பெருமளவு கழித்துவிட்டு நன்னடத்தையுடன் நடந்து கொண்ட கைதிகளில் 34 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். சிறையில் இருப்பதைப் போன்ற உணர்வு இவர்களுக்கு வராமல் இருக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த திறந்தவெளி சிறைச்சாலையில் பணிகள் வழங்குவதற்காக 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ள சிறைத்துறை நிர்வாகம் முடிவெடுத்தது.

இதன்படி சென்னை, பாபா ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையிலான குழுவினர் சிறைச்சாலையில் உள்ள நிலத்தினை கள ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மும்பை பாபா ஆராய்ச்சி நிலையம், ராஜஸ்தான் போன்ற வறட்சி மாநிலங்களில் நோய் தாக்குதலுக்குள்படாமலும், குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு விளைவிக்கப்படும் டிஜி37ஏ நிலக்கடலை பயிரிட பரிந்துரை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சாகுபடிக்காக பாபா ஆராய்ச்சி மையம் சார்பில் சுமார் 175 கிலோ அளவுக்கு விதையை வழங்கினர். கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி கடலை நடவினை நன்னடத்தை கைதிகள் மேற்கொண்டனர். 120 நாள் பயிரான இந்த கடலை ரகம் எதிர்பார்த்த நாளுக்கு முன்பாகவே அறுவடைக்குத் தயாரானது. கடந்த புதன்கிழமை (ஜூன் 18ஆம் தேதி) மதுரை சிறைத் துறை கண்காணிப்பாளர் அறிவுடை நம்பி, விஞ்ஞானி டேனியல் செல்லப்பா ஆகியோர் முன்னிலையில் அறுவடைத் திருவிழா நடைபெற்றது. இதில் எதிர்பார்த்த அளவைவிட இரட்டிப்பு மகசூல் கிடைத்தது. இதுகுறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் கூறியதாவது:-

இந்த திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை கைதிகள் தண்டனைக் காலம் முடிந்து வெளியே செல்லும் போது சக மனிதர்களோடு வாழ்வதற்கு ஏற்ற வகையில் விவசாயத் தொழில் கற்றுக் கொடுக்கப்படுகிறது இது கை கொடுக்கும். தற்போது இந்த திறந்தவெளி சிறைச்சாலையில் சுமார் 3.5 ஏக்கர் அளவுக்கு மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இன்னும் அதிக பரப்பில் விவசாயம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். சிறைவாசிகள் கைவினைப் பொருள்கள், உணவுப் பண்டங்களை தயாரித்து சிறைகளுக்கு வெளியில் உள்ள நிலையங்கள் மூலம் விற்று வருகின்றோம். உணவு பண்டங்கள் தயாரிப்பதற்கு இந்த கடலையைப் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

சென்னை, பாபா ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறுகையில், சிவகங்கை, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய சிறைச்சாலைகளில் டிஜி37ஏ ரக நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் அறுவடை சிவகங்கை திறந்தவெளி சிறைச்சாலையில் செய்யப்பட்டுள்ளது. நோய் தாக்குதல் இல்லாத, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதும், இரட்டிப்பு மகசூல் கிடைக்கக் கூடிய இந்த ரகம் தற்போது ஒரு ஏக்கருக்கு 300 கிலோ மகசூலைத் தந்துள்ளது. பிற விவசாயிகளுக்கும் இந்த ரகம் பரிந்துரைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.