பழனி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 11ம் தேதி திருக்கல்யாணமும், மார்ச்.12ம் தேதி திருத்தேர் உலாவும்


பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 11ம் தேதி திருக்கல்யாணமும், மார்ச்.12ம் தேதி திருத்தேர் உலாவும் நடைபெறவுள்ளது.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் பிரசித்தி பெற்றது பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலாகும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான இங்கு மூலவர் லிங்கவடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவர் 21ம் தேதி இரவு முகூர்த்தக்கால் நடுதலும், கடந்த பிப்ரவரி 25ம் தேதி திருக்கம்பம் அலங்கரித்து எடுக்கப்பட்டு கோயில் முன்பும் நிறுத்தப்பட்டு திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது.
பழனி கோயிலில் நடப்படும் கம்பம் வேப்பமரமாக திரிசூல வடிவில் இயற்கையாக வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பிற கோயில்களில் மூன்றாவது கிளை தனியே இணைக்கப்படுகிறது. ஆனால் பழனி கோயிலில் நீண்ட காலமாகவே கம்பமே திரிசூல வடிவில் கிடைக்கப்பெருகிறது. கம்பம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு பால், பன்னீர், மஞ்சள் நீர் ஊற்றி வழிபாட்டை நடத்தி வருகின்றனர். செவ்வாய்கிழமை கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நடைபெற்றது.
செவ்வாய் மாலை கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின் மாரியம்மன், சிம்மவாகனம், பூஜைப்பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கோயிலை வலம் வர செய்யப்பட்டு பாடல்கள் பாடப்பட்ட பின் திருக்கொடி தங்கக்கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின் கொடிக்கம்பத்துக்கு தர்ப்பை, மாலைகள், மாவிலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு புனித நீரால் கழுவப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடரந்து கம்பத்தடிக்கு எழுந்தருளிய அருள்மிகு மாரியம்மனுக்கு அலங்காரங்கள், நகைகள் சூட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவை தொடர்ந்து கோயில் முன்புள்ள திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சூடச்சட்டி, தீச்சட்டி எடுத்து வந்து நேர்ச்சை செலுத்தினர். கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபாலு, பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு)இராஜமாணிக்கம், காணியாளர் நரேந்திரன்,நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நாளை அடிவாரம் கிழக்கு கிரிவீதி அழகுநாச்சியம்மனுக்கும், வரும் மார்ச் 11ம் தேதி பழனி அருள்மிகு மாரியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா நாட்களில் அம்மன் சிம்மவாகனம், தங்ககுதிரை வாகனம், புதுச்சேரி சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா எழுந்தருள்வார். வரும் மார்ச்.12ம் தேதி மாலை 4.30 மணிக்கு மாசித்தேரோட்டமும், இரவு 9 மணிக்கு அம்மன் வண்டிக்கால் பார்த்தலும் நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக மார்ச்.13ம் தேதி இரவு 10 மணிக்கு கொடியிறக்கப்பட்டு கம்பம் கங்கையில் சேர்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...