மோடிக்கு நாராயணசாமி கேள்வி: நாடு முழுவதும் அலை என்றால் வாரணாசியில் ஏன் பேட்டியிட வேண்டும்?
என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது என மத்திய அமைச்சரும், புதுவை தொகுதி காங்கிரஸ் கட்சிவேட்பாளருமான வி.நாராயணசாமி


என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது என மத்திய அமைச்சரும், புதுவை தொகுதி காங்கிரஸ் கட்சிவேட்பாளருமான வி.நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி விக்டோரி தலைமை தாங்கினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி.சுப்பிரமணியன், எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்று நாராயணசாமி பேசியதாவது:
புதுச்சேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைமை எனக்கு மீண்டும் வாய்ப்பு தந்துள்ளது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதலில் கட்சியும், கட்சித் தலையும் தான் முக்கியமானவை. தேர்தலில் கட்சித் தலைமை என்ன செய்யுமாறு உத்தரவிடுகிறதோ அதை பின்பற்றி நடப்பேன்.
துணைத் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்பு மசோதா, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பொருளாதார வளர்ச்சி பாதிப்படையாமல் இருந்தது. ஆனால் ஊழல் என பா.ஜ.க. புகார் கூறி வருகிறது. அக்கட்சி ஆட்சியிலேயே பெரிய ஊழல்கள் நடைபெற்றன.
என்.ஆர். காங். கூட்டணியில் குழப்பம்
புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணியிலேயே குழப்பம் நிலவுகிறது. பா.ம.க. கட்சி அங்கு நீடிக்குமா எனத்தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி தனியாகவே தேர்தலை சந்திக்கும்.புதுச்சேரியில் மாநில வளர்ச்சிக்கு காங்கிரஸ் பெரும்பங்காற்றி உள்ளது. 17 ரயில்கள்
காரைக்கால், புதுவைக்கு விடப்பட்டன. புதிதாக 4 மேம்பாலங்கள், குடிநீர் திட்டப்பணிகள், காரைக்காலில் வளர்ச்சித்திட்டங்கள் என மொத்தம் ரூ.770 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
ஆனால் என்.ஆர். காங்கிரஸ் அரசு செயலிழந்த அரசாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த திட்டங்களை நிறுத்தி விட்டு, தேர்தல் நடப்பதால் அவற்றை மீண்டும் தொடங்குகின்றனர். ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கி தற்போது மீண்டும் 1400 பேருக்கு வேலை தருவதாக ரங்கசாமி நாடகமாடுகிறார்.தேர்தலை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
மோடி அலை:
இந்தியா முழுவதும் மோடி அலை எதுவும் வீசவில்லை. அவ்வாறு வீசினால் இந்தியாவின் எந்த தொகுதியிலும் மோடி நிற்கலாம். ஆனால் பாதுகாப்பானவாரணாசி தொகுதியில் மோடி ஏன் போட்டியிடுகிறார் என்றார் நாராயணசாமி.
முன்னாள் அமைச்சர் எஸ்.கந்தசாமி, துணைத் தலைவர்கள் வினாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுச் செயலர் ஏகேடி.ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...