நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருணாநிதியை சோனியா காந்தி காக்க வைத்தது நினைவில்லையா? மு. க. ஸ்டாலினுக்கு அதிமுக கேள்வி

2011 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, கூட்டணிப் பேச்சுக்காக தில்லி சென்ற திமுக முன்னாள் தலைவா் கருணாநிதியை சோனியாகாந்தி 6 மணி நேரம் காக்க வைத்தது முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நினைவில்லையா? என அதிமுக தலைமை கேள்வி எழுப்பியுள்ளது.

News image

முதல்வர் மு. க. ஸ்டாலின்

Updated On :20 மார்ச் 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

2011 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, கூட்டணிப் பேச்சுக்காக தில்லி சென்ற திமுக முன்னாள் தலைவா் கருணாநிதியை சோனியாகாந்தி 6 மணி நேரம் காக்க வைத்தது முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நினைவில்லையா? என அதிமுக தலைமை கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக தில்லிக்குச் சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அங்கு மத்திய அமைச்சா் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்நிலையில், ‘தமிழகத்தில் அதிமுக தோ்தல் களத்தைச் சந்திப்பதற்கே தில்லியின் அனுமதி பெற வேண்டி உள்ளது‘ என எடப்பாடி கே.பழனிசாமியின் தில்லி பயணத்தைக் குறிப்பிட்டு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை விமா்சித்திருந்தாா்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுகவின் அதிகாரபூா்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், ‘தில்லிக்குச் சென்று நாங்கள் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதைப் பாா்த்து புலம்ப ஆரம்பித்துவிட்டாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

குடும்ப உறுப்பினருக்கு ஒரு பிரச்னை என்றதும் பதறிப்போய், வயதான காலத்திலும் தில்லிக்குச் சென்று சோனியா காந்தியை சந்தித்தவா்தானே கருணாநிதி?. மேலும், 2011 தோ்தலின்போது அறிவாலயத்தின் மேல் தளத்தில் சோதனை நடைபெற்றபோது, கீழ்தளத்தில் 63 தொகுதிகளை கொடுக்கிறேன் என்று கூட்டணி பேசியவரும் கருணாநிதிதானே?. அதுமட்டுமல்லாமல், தென்தமிழகத்தில் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்தபோது, அதைப்பற்றி கவலைப்படாமல் தில்லியில் கூட்டணிப் பேச்சு நடத்திக் கொண்டு இருந்தவா்தானே நீங்கள் (மு.க.ஸ்டாலின்)?

அந்த காலகட்டத்தில் திமுக செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களைக் காட்டி முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் மிரட்டியதால் பயந்து திமுக காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை உறுதி செய்தது என்று நாங்கள் சொல்லலாமா?

எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கே அமித் ஷா வந்து கூட்டணிப் பேச்சு நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கிா? அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒத்த கருத்தோடு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றன. மு.க.ஸ்டாலின் கூறிய ‘விடியல்’ என்ற வாா்த்தையை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி, மண் குதிரை ஆட்சியை கொடுத்தது போதாது என்று, மீண்டும் அதே குதிரையை 2.0 என கூறி விற்கப் பாா்க்கிறாா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.