

திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
இந்த நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரப்பட்டதாகவும், தேர்தல் நேரத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பு என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த திங்கள்கிழமை சென்னைக்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக எம்பி கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், திமுகவுடனான பேச்சுவார்த்தை குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் பிரபாகர் தமிழரசுவுடனான நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு கிரிஷ் சோடங்கர் பதில் அளித்துள்ளார்.
திமுக தனது கூட்டணிக் கட்சிகளை தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதா?
இல்லை. அவர்கள் இன்னும் எங்களை அழைக்கவில்லை. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கிறோம்.
காங்கிரஸ் கோரிக்கைகள் என்னென்ன?
பேச்சுவார்த்தை தொடங்கியதும் உங்களுக்குத் தெரிவிப்போம். அப்போதுதான் நாங்கள் என்ன கேட்கிறோம், அவர்கள் என்ன கொடுக்க முன்வருகிறார்கள் என்பதை சரியாக தெரிவிக்க முடியும்.
அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே, சென்னைக்கும் தில்லிக்கும் இடையே உயர்நிலைத் தலைவர்கள் வருகைகள் நடந்தன, உண்மையில் என்ன நடக்கிறது?
மரியாதை நிமித்தமான சந்திப்புதான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளார் கே.சி. வேணுகோபாலும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட்டணி குறித்து விவாதித்தனர். தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடரும்.
உள்ளாட்சி தேர்தல்களில் அதிகாரப் பகிர்வு குறித்து இருவரும் விவாதித்தனர். எங்களின் முக்கிய நிபந்தனை கூடுதல் தொகுதிகள் பற்றியது. இரு கட்சிகளின் குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்தும்போது அதுகுறித்து விவாதிப்போம்.
உள்ளாட்சி அளவில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள திமுக ஒப்புக்கொண்டதா?
ஆம். உள்ளாட்சியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் திமுகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
மாநில அளவில் அதிகாரத்தில் பங்கு பெற காங்கிரஸ் முயற்சிக்கிறதா?
எந்தக் கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? நாங்கள் ஒரு அரசு சாரா நிறுவனத்தை நடத்தவில்லை, ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன. ஆனால், அத்தகைய கலாசாரம் தமிழ்நாட்டில் இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார்.
அதிகாரத்தில் பங்கு கோரிக்கையை கைவிட்டுவிட்டீர்களா? அல்லது தொடருமா?
அரசியலில் எதையும் கைவிட முடியாது. இந்த விருப்பம் அடிமட்டத்தில் இருந்து வந்துள்ளன. அவற்றை நமது கோரிக்கைகளாக முன்வைக்க வேண்டும்.
விஜய்யின் கட்சியைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
ஒவ்வொரு அரசியல் கட்சியும் லட்சியத்தின் காரணமாக உருவாகிறது. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல்கள் முடிவு செய்யும்.
40 வயதுக்குட்பட்டவர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் விஜய்யின் கட்சி செல்வாக்குப் பெற்று வருவதாக நான் கேள்விப்படுகிறேன். அதுதான் (தவெகவின் தாக்கம்) எங்கள் கவலை.
தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஊகங்கள் உள்ளன. தவெகவுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சிக்கிறதா?
தவெக எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது அவர்கள் எங்கள் பலத்தை அங்கீகரித்துள்ளனர்.
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதா?
தற்போது நாங்கள் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
விஜய்யுடன் காங்கிரஸ் தொடர்பில் இருப்பதை நீங்கள் மறுக்கவில்லை?
அரசியலில் எல்லோரிடமும் பேச வேண்டும். தொடர்பு ஒருபோதும் இல்லாமல் இருக்காது. கடுமையான எதிரிகள்கூட தொடர்பு கொள்கிறார்கள். அதிமுக தலைவர்களை சந்திக்கும்போதுகூட ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்வோம்.
காங்கிரஸுக்குள் இருந்து வரும் விமர்சனங்களும், முரண்பட்ட குரல்களும் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தியா? அது கட்சியின் பிம்பத்தை பாதிக்கிறதா?
எங்கள் கட்சி ஜனநாயக ரீதியில் அனைவரின் கருத்துகளையும் மதிக்கிறது. கடந்த தேர்தலில் நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம். எங்கள் மாநிலத் தலைவர் (கே. செல்வப்பெருந்தகை) திமுக தலைமையுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறார். அதற்காக யாரும் தலைவரை விமர்சிக்கக்கூடாது.
நாங்கள் ஏன் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்? திமுக எங்களால் அழுத்தம் அடைந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? நாங்கள் வைக்கும் கோரிக்கைக்கு அவர்கள் ஆம் அல்லது இல்லை என்று சொல்லப் போகிறார்கள். இது வாழ்வா? சாவா? பிரச்னை கிடையாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் எப்போது தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கலாம்?
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கான நாள் வரும். 58 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரம் இல்லாத போதிலும் உயிரோட்டம் உள்ள வலுவான தொண்டர் எங்களிடம் உள்ளனர். 234 தொகுதிகளிலும் சுமார் 5,000 விண்ணப்பங்களைப் பெற்றோம். அது எங்கள் பலத்தைக் காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.