கரூர் அமராவதி ஆற்றில் தொடரும் மணல் திருட்டால் ஆழ்குழாய் கிணறுகளில் மேலும் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொருநை என சங்க காலத்தில் அழைக்கப்பட்ட அமராவதி நதி கேரள மாநிலத்தின் மூனாறு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையைக்கொண்டு கிழக்கு நோக்கி ஓடி கரூர் மாவட்டத்தில் திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியுடன் சங்கமிக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. மழைகாலங்களில் சேமிக்கப்படும் இந்த தண்ணீர் மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் அமராவதி அணையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டுமே உரிய தண்ணீர் கிடைத்தது. கரூர் மாவட்டத்துக்கு 2 முறை குறைந்தளவு தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் அமராவதி நதி பாயும் இடங்களில் ஆறு தற்போது வறண்டு காணப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கரூர் நகர் பகுதிகளுக்கு குடிநீருக்காகவும் மற்ற சாதாரண உபயோகத்திற்காகவும் விநியோகம் செய்வதற்காக ஆற்றில் போடப்பட்ட குடிநீர் உறிஞ்சும் கிணறுகளிலும் தண்ணீர் பம்பிங்க் செய்ய முடியாத அளவுக்கு கீழே சென்றுவிட்டது. இந்நிலையில் குடிநீர் உறிஞ்சும் கிணறுகளைச் சுற்றிலும் மணல் திருடும் கும்பல்கள் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வருகிறார்கள். இதனால் வரும் கோடை காலங்களில் கரூர் நகர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றுப்படுகைகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக அமராவதி பாசன கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, அமராவதி ஆற்றில் இயந்திரம் உதவியுடன் மணல் அள்ள தடை உள்ளது. இருப்பினும் மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்கள் அதிகாரிகளுக்கு தெரியாமல் அள்ளிச்சென்று விடுகின்றனர். இதனைக்கண்டுபிடித்து மணல் அள்ளிச்செல்லாதவாறு குழி வெட்டி போட்டால், அதனையும் இரவோடு, இரவாக மூடிவிட்டு அவர்களது வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதையும் மீறி கண்டித்தால் நடைமுறைச் சிக்கல் உருவாகுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.