பழனி திண்டுக்கல்ரோடு ஸ்ரீஜெயசங்கரமஹாலில் திங்கள்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பேரவைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை அறிமுகம் செய்து வைத்தும், தேர்தல் பணிகள் திட்டமிடுதல் பற்றியும் கட்சியினர் கலந்தாலோசனை நடத்தினர். கூட்டத்துக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் இராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பழனி சிபிஐ ஒன்றிய செயலாளர் மணி முன்னிலை வகித்தார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரதராஜன், சிபிஎம் மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சந்தானம் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர். சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், பாஜ, காங்கிரஸ் இரு கட்சிகளுமே அடித்தட்டு மக்களுக்கு நல்லதை செய்வது போன்ற மாயையை செய்து கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, தாராளமயமாக்கல் போன்றவற்றிற்கு முன்மொழிந்தது பாஜக அரசு. அதை அமல்படுத்தியது காங்கிரஸ். உண்மையாக மதச்சார்பற்ற ஆட்சியை மத்தியில் அமைக்க பாடுபடுவது கம்யூனிஸ்ட் கட்சிகளே.