பழனி பங்குனி உத்திரத் திருவிழா. ஏப்.7 கொடியேற்றம்: ஏப்.13 தேரோட்டம்
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் பங்குனி உத்திரத் திருவழா வரும் ஏப்ரல்.7 ல் திருக்கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 12ம் தேதி


ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் பங்குனி உத்திரத் திருவழா வரும் ஏப்ரல்.7 ல் திருக்கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 12ம் தேதி வெள்ளித்தேரோட்டமும், ஏப்ரல்.13ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
பழனியில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியன இருபெரும் விழாக்களாகும். தற்போது தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றுள்ள நிலையில் விரைவில் பங்குனி உத்திரத் திருவிழா துவங்கவுள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான முருகபக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி தீர்த்தம் தரித்து பழனிக்கு பாதயாத்திரை வருகின்றனர். இந்த கொடுமுடி தீர்த்தம் பழனிமலையில் உள்ள நவபாஷாண மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. கோடை காலமான பங்குனி மாதத்தில் மூலவரை குளிர்ச்சி செய்யும் விதமாக நவபாஷாண சிலைக்கு நடைபெறும் இந்த அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல்.7ல் திருஆவினன்குடி கோயிலில் திருக் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறவுள்ள விழா நாட்களில் தினமும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளியானை, தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் கிரிவீதி உலா எழுந்தருள்கிறார். வரும் ஏப்ரல். 12ம் தேதி திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் அருள்மிகு வள்ளி, தேவசேனை சமேதர் முத்துக்குமாரசாமி கிரிவீதி உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் வரும் ஏப்ரல்.13ம் தேதி மாலை நடைபெறுகிறது. ஏப்ரல்.16ம் தேதி சுவாமி தங்கக்குதிரையில் புறப்பாடு செய்த பின்னர் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
விழா நாட்களின் போது பழனி அடிவாரம் கிரிவீதி குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா மற்றும் திருக்கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...