கருணாநிதி சுட்டிக் காட்டுபவர் தான் இந்தியாவின் பிரதமராக முடியும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எம். காதர் மொய்தீன் சனிக்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் காரைக்கால், தூத்துக்குடி, கீழக்கரை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 18 சிறு, குறு துறைமுகங்கள் மூலம் வியாபாரம் நடைபெற்று பொருளாதாரம் மற்றும் தொழில் துறை உயர்வடையும். இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது ஏற்றுக் கொள்ளமுடியாதது. அரசியல் ராஜதந்திரத்தில் ஓட்டை விழுந்தது போன்றது இச்செயல்.
சுயநிதி அடிப்படையில் இயங்கி வந்த சுமார் 600 சிறுபான்மையினரின் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் அரசு நிதியுதவி வழங்கி கடந்த திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. இதற்காக ரூ.347கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுக அரசால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டப்பேரவை, தொல்காப்பிய பூங்கா, செம்மொழி பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவை அதிமுக ஆட்சியில் மூடப்பட்டன. அதிமுகவும், பாஜகவும் கொள்கை அளவில் வேறுபடவில்லை. இசுலாமியர்களுக்கு மு. கருணாநிதி வழங்கிய மூனறை சதவீத இடஒதுக்கீட்டை தான் வழங்கியதாக பொய் கூறி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. மேலும் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் அதிமுக கூட்டணியில் இருப்பதாகவும் பொய் கூறி வருகிறார். இதை அவர் கைவிட வேண்டும். இல்லையேல் அவர் செல்லுமிடத்தில் எல்லாம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தமிழக முதல்வருக்கு கருப்பு கொடி காட்டுவோம்.
இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது சிறுபான்மையினருக்கு திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய உணர்வுகளை மதிக்கக் கூடியவர்களுடன் தான் நாங்கள் எப்பொழுதும் கூட்டணி அமைப்போம். அது போல தான் தற்போதும் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். கருணாநிதி சுட்டிக் காட்டுபவர் தான் இந்தியாவின் பிரதமராக முடியும். பிரதமராக கனவு காணக் கூடியவர்கள் எவரும் பிரதமராக முடியாது. கடந்த 2004 ஆம் ஆண்டில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது போல 2014-ம் ஆண்டிலும் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.
மாநில பொதுச் செயலர் கே.ஏ.எம். அபூபக்கர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச். அப்துல் பாசித், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆம்பூர் நகர தலைவர் கே. இக்பால் அஹமத், நகர செயலர் எம். கயாசுதீன், மாவட்ட பொருளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.