விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை புதுமுக நடிகர் கொன்று புதைப்பு: மூவர் கைது

திருநெல்வேலியை சேர்ந்த புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதைக்கப்பட்ட நடிகர் ரொனால்ட்பீட்டர் பிரின்சோ உடல் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்படுகிறது. இவ்வழக்கில் மூவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :11 மே 2014, 2:51 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியை சேர்ந்த புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதைக்கப்பட்ட நடிகர் ரொனால்ட்பீட்டர் பிரின்சோ உடல் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்படுகிறது. இவ்வழக்கில் மூவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பரப்பாடியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சூசைமரியான். இவரது மகன் ரொனால்ட்பீட்டர் பிரின்சோ (37). தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரத்தில் கணினி மையம் நடத்தி வந்தார். பின்னர் சென்னைக்கு சென்ற ரெனால்ட்பீட்டர்பிரின்சோ, அங்கு காகிதபுரம் என்ற திரைப்படத்தில் நடித்தாராம்.

அங்கு துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் ரொனால்ட்பீட்டருக்கு பழக்கம் ஏற்பட்டது. ரொனால்ட்பீட்டர் திருநெல்வேலி நகரை சேர்ந்த நண்பர் உமாசந்திரன் மற்றும் சிலருடன் சேர்ந்து இணையதளம் மூலம் தொழில் செய்து வந்தாராம். 

இந்நிலையில் ரொனால்ட் பீட்டரை காணவில்லை என துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். இதனிடையே சென்னையில் வசிக்கும் தம்பி ரொனால்ட்பீட்டரை அவரது சகோதரர் ஜஸ்டின்பிரின்சோ சந்திக்க சென்றாராம். அங்கு ரொனால்ட்பீட்டர் இல்லை. இதை தொடர்ந்து திருநெல்வேலிக்கு வந்து ரொனால்ட்பீட்டரை தேடினாராம். இதையடுத்து ஜஸ்டின்பிரின்சோ அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே ரொனால்ட்பீட்டரிடம் கார் டிரைவராக பணி செய்த ஜான்பிரின்சனை, ஜஸ்டின்பிரின்சோ திருமங்கலத்தில் வைத்து சந்தித்தாராம். ஜான்பிரின்சன் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜஸ்டின்பிரின்சோ பாளையங்கோட்டை போலீஸில் தகவல் தெரிவித்தார். விசாரணையில் நடிகர் ரொனால்ட்பீட்டர் கொன்று புதைக்கப்பட்டது தெரியவந்தது. 

ரொனால்ட்பீட்டரிடம், அவரது நண்பர் உமாசந்திரன் தொழிலில் முதலீடு செய்த தொகையில் இருந்து ரூ. 1 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டாராம். ரொனால்ட் பீட்டர் பணம் கொடுக்கவில்லையாம். இதில் ஆத்திரமடைந்த உமாசந்திரன், துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா, கார் டிரைவர் ஜான்பிரின்சன் ஆகியோர், நடிகர் ரொனால்ட்பீட்டரை கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி சென்னையில் வைத்து கொலை செய்தனர். பின்னர் ரொனால்ட்பீட்டர் உடலை காரில் திருநெல்வேலிக்கு கொண்டு வந்தனர்.

பாளையங்கோட்டை ஆசீர்வாதபுரத்தில் மைதானத்தில் நடிகர் ரொனால்ட்பீட்டர் உடலை ஜான்பிரின்சன், உமாசந்திரன் ஆகியோர் நண்பர்கள் உதவியுடன் புதைத்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீஸார் உமாசந்திரனின் நண்பர்கள் ரபீக்உஸ்மான், காந்திமதி என்ற விஜய், ஆனஸ்ட்ராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். சனிக்கிழமை உதவி ஆணையர் மாதவன், பாளை வட்டாட்சியர் சொர்ணகோமதிநாயகம் மற்றும் அதிகாரிகள் முன்னலையில் ரொனால்ட்பீட்டர் புதைக்கப்பட்ட இடத்தை மூவரும்  அடையாளம் காட்டினர். அவரது உடலை ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து கார் டிரைவர் ஜான்பிரின்சனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். புதுமுக நடிகரை கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.