கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் 15 நிமிட காற்றுக்கு 70 மரங்கள் இரை!

திருநெல்வேலியில் திங்கள்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 15 நிமிடம் வீசிய பலத்த காற்று காரணமாக திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட மரங்கள்

News image
Updated On :12 மே 2014, 3:07 pm

முத்துகுமார்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 15 நிமிடம் வீசிய பலத்த காற்று காரணமாக திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு அக்னிநட்சத்திம் மழையுடன் தொடங்கியது. 4 நாள்கள் தொடர்ந்து நீடித்த மழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நிலத்தடி நீர்மட்டமும் சற்று உயர்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் கடந்த 2 நாள்களாக மழை பெய்யாமல் வெயிலின் உக்கிரம் அதிகரித்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது.

திங்கள்கிழமை காலையிலும் வெயிலின் ஆதிக்கம் அதிகரித்தது. ஆனால், மாலை 3.45 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் திரண்டன. மாலை 3.50 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. 4 மணி முதல் 4.15 மணி வரை இதுவரை இல்லாத அளவுக்கு நெல்லை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால், வீட்டில் இருந்த பொருள்கள் தூக்கி வீசப்பட்டன. 4 வழிச்சாலையில் சென்ற வாகனங்கள் கூட காற்றை எதிர்த்து வேகமாக செல்ல முடியாமல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் ஊர்ந்து சென்றதைக் காணமுடிந்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் எதிர்புறம் 100 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. அந்த மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ், மரத்தின் கிளைகளுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரக்கிளையை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸை மீட்டனர். பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, நகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சிறிய அளவில் வைக்கப்பட்டிருந்த விளம்பரபதாகைகள் சாலைகளில் பறந்துவிழுந்தன.

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம் அருகே  லூர்துநாதன் சிலை பகுதி, வணிகவரித்துறை அலுவலகம், ஜோதிபுரம், குறிச்சி, குலவணிகர்புரம், ஏ.ஆர்.லைன், வீரராகவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.  ராஜேந்திரநகரில் மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் அதிருஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மின்வயர்கள் சேதம்:

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம் அருகே அடுத்தடுத்து 2 பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து மின்சார வயரில் விழுந்தன. 2 மின்கம்பங்களும் சேதமடைந்ததால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள், இருசக்கரவாகனங்கள் வ.உ.சி. மைதானத்தின் வழியாக திருப்பிவிடப்பட்டது. பாளையங்கோட்டை மார்க்கெட், அருள்நகர், மேடைகாவல்நிலையம் பகுதிகளிலும் பெரியமரங்கள் முறிந்து விழுந்தன. வ.உ.சி. மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கியதால் சிறுவர்கள் விளையாட முடியாமல் தவித்தனர்.

பேருந்து மீது விழுந்த மரம்:சிவந்திப்பட்டியில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு அரசு பேருந்து திங்கள்கிழமை மாலையில் புறப்பட்டது. இந்த பேருந்தில் பாலாமடையைச் சேர்ந்த முத்துமாலை மனைவி மாடத்தி என்ற மல்லிகா (23), அவரது மகன் இசக்கிபாலாஜி (1) ஆகியோர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடந்து பேருந்து சென்றபோது மரம் வேரோடு சாய்ந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில், முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. தலையில் பலத்த காயமடைந்த மல்லிகாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இசக்கிபாலாஜி உள்பட இதர பயணிகள் காயமின்றி தப்பினர்.

சாலையில் இருந்து ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் மரம் அப்புறப்படுத்தப்பட்டது. அப் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் அனைத்தும் ஏ.ஆர்.லைன் வழியாக திருப்பிவிடப்பட்டன.அரசு மருத்துவமனையின் பின்பகுதியில் உள்ள குடியிருப்பில் கோயில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் பலத்த காற்றினால் சரிந்தது. அதனை அப் பகுதி மக்கள் உடனடியாக சரிசெய்தனர். பலத்த காற்றினால் திருநெல்வேலி நகரம் முழுவதும் மின்தடையும் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் மின்வயர்களில் விழுந்த மரக்கிளைகளை தீயணைப்புத் துறையினரும், மின்வாரியத்தினரும் சென்று அப்புறப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.