/

நாட்டியாஞ்சலி நடத்த முடிவு செய்த தீட்சிதர்களுக்கு மிரட்டல் கடிதம்: போலீஸில் புகார்

சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் நாட்டியாஞ்சலியை தாங்களே ஏற்று நடத்த முடிவு செய்த தில்லைநாட்டிய அஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகளான 7 தீட்சிதர்களுக்கு சனிக்கிழமை தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

News image
Updated On :17 மே 2014, 3:04 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் நாட்டியாஞ்சலியை தாங்களே ஏற்று நடத்த முடிவு செய்த தில்லைநாட்டிய அஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகளான 7 தீட்சிதர்களுக்கு சனிக்கிழமை தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில், தீட்சிதர்கள் 7 பேரும் புகார் அளித்துள்ளனர்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இச்சிறப்பு வாய்ந்த நாட்டியாஞ்சலி விழா 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மூலம் இதுநாள் வரை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.

நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டு (2015) முதல் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் உலகப்புகழ் பெற்ற நாட்டிய அஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சியை தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் என்ற பெயரில் கோயில் பொதுதீட்சிதர்களே நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளனர். நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியன்று தொடங்கி 9 நாட்கள் நடத்துவது என்றும், கோயில் விதிமுறைப்படி தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நாட்டியாஞ்சலியை நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் தலைவர்  எஸ்.வி.நவமணி தீட்சிதர், துணைத் தலைவர் எஸ்.நடராஜ சுப்ரமண்ய தீட்சிதர், செயலாளர்- எஸ்.யு.ஐயப்பன் தீட்சிதர், பொருளாளர்- ஜெய.நடராஜமூர்த்தி தீட்சிதர், உறுப்பினர்கள்- சோம.விஜயபாலதீட்சிதர், ஜே.சிவச்செல்வ தீட்சிதர், ஏ.எஸ்.ஏ ஆனந்த தாண்டவ தீட்சிதர் ஆகியோருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

அக்கடிதத்தில் " பல ஆண்டுகளாக நாட்டியாஞ்சலியை எங்களது சமூகத்தினினர் நடத்தி வருகிறார்கள். 25 வருடம் முன்பு ஸ்வர்ண தீட்சிதராலே நடத்த முடியவில்லை. எங்களிடம் தோற்றுவிட்டார். நீங்கள் நடத்துவது முறையல்ல, கோயில் பூஜையை செய்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். கோயில் தீர்ப்பு உங்களுக்கு சாதமாக வந்துள்ளது நினைத்து ஆடாதீர்கள். வீன் பிரச்சனை வேண்டாம், ஜாக்கிரதை, அபாயம். தேவையில்லாத விஷயத்தில் தலையை கொடுத்து மாட்டிக் கொள்ளதீங்க. அதையும் மீறி நடத்தி பாருங்க, பின்னாடி நாள் யாருன் தெரியும், புரியும்" என கடிதத்தில் கூறப்படுள்ளது. இதுகுறித்து 7 தீட்சிதர்களுக்கு சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மிரட்டல் கடித்ததுடன் புகார் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.