குழந்தைகள் இறப்பைத் தடுப்பது அரசியல் அல்ல, அவசியம்: தமிழிசை செளந்தரராஜன்
குழந்தைகள் இறப்பைத் தடுப்பது என்பது அரசியல் அல்ல. அவசியம் என பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தார்.


குழந்தைகள் இறப்பைத் தடுப்பது என்பது அரசியல் அல்ல. அவசியம் என பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.கவின் சார்பில் 5 மாவட்ட அளவிலான உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியது:
தருமபுரி அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்த்துவிட்டு வருகிறேன். அங்கு அறுவைச் சிகிச்சை, இருதயம், நரம்பியல் போன்ற துறைகளில் மருத்துவர்கள் இல்லை. அதிகரித்து வரும் குழந்தை இறப்புகளைத் தடுப்பதில் இவர்களின் பங்கு அதிகம். ஆகவே தருமபுரி அரசு மருத்துவமனைகளில் உயர்கல்வி படித்த மருத்துவர்களை உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. பெண்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை உரிய முறையில் சென்றடைகிறதா என தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
குழந்தை இறப்பு சம்பவங்கள் இயற்கை மரணங்கள் எனவும், இதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் இறப்பைத் தடுப்பது என்பது அரசியல் அல்ல. அவசியம் ஆகும். தமிழக அரசு குழந்தைகள் இறப்பு சம்பவங்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. கொலை,கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திருப்பூரில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இவற்றைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலைக்கு வருபவர்களை தீவிர விசாரணைக்குப் பிறகே பணியில் அமர்த்த வேண்டும். இது குறித்து தமிழக அரசு தகுந்த திட்டம் வகுக்க வேண்டும்.
தமிழக அரசு 5 மீனவர்களின் வழக்கு செலவுக்கு உதவியது என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால் ஒரு நாட்டில் சிறைபட்டிருக்கும் மீனவர்களை மீட்க வேண்டுமானால், அந்த நாட்டு அதிபருடன் நம் நாட்டு பிரதமர்தான் பேசி விடுவிக்க முடியும். அந்த வகையில் 5 மீனவர்களின் விடுதலையில் பிரதமர் மோடியின் பங்கு மிக முக்கியமாகும்.
தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை அரசையும், இலங்கை அதிபர் ராஜபட்சேவையும் தமிழக பாஜக கண்டிக்கிறது. மீனவர் பிரச்னையில் நிரந்தர தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விரைவில், இந்தப் பிரச்னை தொடர்பாக நிரந்தர தீர்வு காணப்படும்.
உரத்தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்றார் தமிழிசை செளந்தர்ராஜன்.
இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் கே.என்.லஷ்மணன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு, மாநில துணைத் தலைவர் சிவகாமி பரமசிவம், சேலம் மாவட்ட பொது செயலாளர் கோபிநாத், கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி, சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...