பழனி மலைக்கோயிலில் கந்தர் சஷ்டியை முன்னிட்டு அருள்மிகு சண்முகர் திருக்கல்யாணம்
பழனி மலைக்கோயிலில் கந்தர் சஷ்டி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற இவ்விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் தினமும் அருள்மிகு


பழனி மலைக்கோயிலில் கந்தர் சஷ்டி நிறைவு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
பழனி மலைக்கோயிலில் கந்தர் சஷ்டி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற இவ்விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் தினமும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர், அருள்மிகு சின்னக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. விழாநாட்களில் தங்கமயில், வெள்ளிக்காமதேனு, தங்கசப்பரத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.
கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. புதன்கிழமை ஆறாம்நாள் நிகழ்ச்சியாக அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் மலைக்கோயிலில் நடைபெற்றது. காலையில் விநாயகர் அனுமதி, புண்யாவாசனம் நடத்தப்பட்டு சண்முகர் வேள்வி நடத்தப்பட்டது. தொடர்ந்து பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை ஆகியன நடைபெற்றன. அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு பால், பஞ்சாமிர்தம், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பதினாறு வகை பொருட்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு வெள்ளிக்கவசம், வண்ணப்பட்டாடை, மலர்மாலைகள் மற்றும் வைரவேல் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாங்கல்யத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளம் முழங்க, ஓதுவார்கள் பாடல்கள் இசைக்க, வேத விற்பன்னர்கள் வேதம் பாட திருக்கல்யாண நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியை திருக்கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் தலைமையில் செல்வசுப்ரமணிய சிவாச்சார்யார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான சிவாச்சார்யார்கள் நடத்தி வைத்தனர். திருக்கல்யாணத்தின் போது சங்கராலயம் சார்பில் திருமண சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. விழா நிறைவில் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அவற்றை பெற்று பக்தர்கள் சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு நடைபெற்ற திருமண விருந்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அறுசுவை உணவு அருந்தினர். விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் தங்கியிருந்து சுவாமி புறப்பாட்டில் பங்கேற்ற திருக்கோயில் யானை கஸ்தூரி மாலையில் மலை இறங்கியது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், பிரசாதஸ்டால் ஹரிஹரமுத்து, திருப்பூர் லாட்ஜ் மகேஷ், சங்கராலயம் முருகனடிமை பாலசுப்ரமணி, சாது சண்முக அடிகளார், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், அதிமுக முன்னாள் எம்எல்ஏ., சுப்புரத்தினம், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களும், திருக்கோயில் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...