திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

சேலம் அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொலை: போலீஸ் குவிப்பு

சேலம் மாவட்டம் வீராணம் அருகே திமுக பிரமுகர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல்

Updated On :18 செப்டம்பர் 2014, 3:11 pm

சேலம் மாவட்டம் வீராணம் அருகே திமுக பிரமுகர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

வீராணம் அருகேயுள்ள பள்ளிப்பட்டி, டி-பெருமாபாளையம் பிரிவு ரோடு செட்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(40). திமுக பிரமுகரான இவர், தனது மனைவியுடன் சேர்ந்து வீட்டின் அருகேயுள்ள டி-பெருமாபாளையம் பிரிவு ரோட்டில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். தினசரி காலை 7 மணிக்கு இவர் அழகு நிலையத்தைத் திறப்பது வழக்கம்.

 அதன்படி, வியாழக்கிழமை காலை அழகு நிலையத்தைத் திறந்து அங்கு அமர்ந்திருந்தார். காலை 8 மணியளவில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 10 பேர் அடங்கிய கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் அழகு நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த முருகனை சரமாரியாக வெட்டினர்.

 தலை, கைகள், வயிறு என பல இடங்களில் ஏராளமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே முருகன் இறந்தார். இதை உறுதி செய்த அந்த கும்பல், கடையில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

 இது குறித்து உடனடியாக வீராணம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் பிரபாகரன் தலைமையில் உதவி ஆணையர்கள் அசோகன், விவேகானந்தன், மணிவண்ணன், ஆய்வாளர்கள் பால்பாண்டி, நாகராஜன், கண்ணையன் உள்ளிட்ட சுமார் 100 போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் மோப்ப நாய் பிங்கி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அழகு நிலையத்தில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

 இதற்கிடையே முருகன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு திரண்டனர். மேலும் அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்காக சடலத்தை போலீஸார் எடுக்க முயன்றபோது, உறவினர்களும் பொதுமக்களும் அதைத் தடுத்தனர். குற்றவாளிகளை கைது செய்த பிறகே சடலத்தை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

 இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதையடுத்து முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

 இதே பகுதியைச் சேர்ந்தவரும் முருகனுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட வருமான நடத்துநர் சண்முகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இருப்பினும் இந்த கொலைக்கும் முருகனுக்கும் தொடர்பு இல்லை என்று அவரை விடுவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 முருகன் தொடக்கத்தில் அதிமுகவில் இருந்துள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதற்கிடையே குற்றவாளிகள் யார் என்பது தெரிந்துவிட்டதாகவும் அவர்களை இரவுக்குள் பிடித்து விடுவோம் என்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 முருகன் படுகொலையைத் தொடர்ந்து பள்ளிப்பட்டி பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.