சதுரகிரி மலையில் ஆடி அமாவசை திருவிழா: பக்தர்கள் வசதிக்காக தாற்காலிகமாக மலைப்பாதை சீரமைப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலுக்கு சென்றுவரும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் கரடு, முரடான மலைப்பாதையை எளிதாக கடக்கும் வகையில் தாற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.  
Updated on
2 min read

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலுக்கு சென்றுவரும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் கரடு, முரடான மலைப்பாதையை எளிதாக கடக்கும் வகையில் தாற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.  

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம்-சந்தனமகாலிங்கம் திருக்கோயில். இக்கோயிலுக்கு தாணிப்பாறை, பேரையூர் அருகே வாழைத்தோப்பு மற்றும் வருசநாடு அருகே உப்புத்துறை ஆகிய மலைப்பாதை வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்ய வந்து செல்கின்றனர்.

இக்கோயிலில் ஆடி அமாவசை திருவிழா என்பது முக்கியமானதாகும்.    அன்றைய நாளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது, இந்நிலை மாறி ஒவ்வொரு மாதமும் ஆடி அமாவசை மற்றும் பௌணர்மி நாள்களில் வழிபாடு செய்ய இக்கோயிலுக்கு வருகிற பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் இருந்து மலைமேல் 6.50 கி.மீ தூரம் நடந்து சென்று அடைய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கடந்த மே மாதம் 17-ம் தேதி இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளி்ல் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்யச்சென்றனர். அப்போது, வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்புகையில் பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், தாணிப்பாறை அடிவாரத்தில் குளித்துக் கொண்டிருந்தோர், பிலாவடிய கருப்பசாமி கோயில் அருகே வந்த பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி 8 பேர்  உயிரிழந்தனர். 

இதைத் தொடர்ந்து அக்கோயிலுக்கு செல்ல காலை 8 மணி முதல், மாலை 4 மணி வரையில் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதைத் தொடர்ந்து அடிவாரப்பகுதியில் இருந்து மேலே செல்வதற்கான மலைப்பாறைகள் செங்குத்தாகவும், கரடு, முரடாகவும் இருப்பதை சரி செய்யவும், இதுபோன்ற இடங்களில் பெரியவர்கள் நிதானம் தவறினால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையிருந்தது.

குறிப்பிட்ட இடங்களில் பாறைகளை சமதளமாகவும், குண்டும் குழியுமாக இல்லாமல் பாதையை சீரமைக்கவும், இடையிடையே குடிதண்ணீர் வசதி, மலையில் சமதள பரப்பில் ஓய்வறைகளும் அமைக்க வேண்டும் என இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் ரூ.10 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால் பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வருகிறது.

இது தொடர்பாக வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், தற்போது ஆடி அமாவசை திருவிழாவை முன்னிட்டு இக்கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுவரும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் மலைப்பாதையில் காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பகுதிகளில் தாற்காலிகமாக கற்கள் ஒதுக்கப்பட்டு சமதளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நாளில் அதிக பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வருகிற 8-ம் தேதி முதல், தொடர்ந்து 18 ம் தேதி வரையில்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காட்டாற்று வெள்ளம் சூழும் 5 பகுதிகளில் வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் கொண்ட குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல், வத்திராயிருரப்பு பிரிவு சாலையில் தாணிப்பாறை சென்று, போகும் போது மகராஜாபுரம் சாலை வழியாக செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகளும் காலை முதல் மாலை 5 மணி வரையில் இயக்கவும், சாலையோரம் கடைகள் அமைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com