ஆலங்குளம் வட்டத்தில் மடத்தூர், வெங்கலாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட முத்தம்மாள்புரத்தில் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதி மக்கள் தினமும் பண்டாரபுரத்தில் உள்ள கால்வாயை கடந்துதான் செல்ல வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்த கால்வாயில் தண்ணீர் செல்கிறது. இந்த நேரத்தில் தண்ணீருக்குள் இறங்கிதான் கடந்து செல்ல வேண்டியுள்ளதால் மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்தப் பகுதியில் பாலம் அமைக்கக்கோரி அதிகாரிகளிடம் நேரடியாகவும், மனுக்கள் மூலமும் பலமுறை முறையிட்டும் பலனில்லையாம். இதைக்கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக முத்தம்மாள்புரம் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.