/

பழனி மலைக்கோயிலில் மதுரையை சேர்ந்த முருக பக்தர்கள் அலகுகுத்தி நேர்ச்சை செலுத்தினர்

ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வியாழக்கிழமை ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய

News image
Updated On :1 ஜனவரி 2015, 11:48 am

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வியாழக்கிழமை ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பல இலட்சம்  பக்தர்கள் திரண்டனர்.  வியாழக்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகைத் திருநாளும் சேர்ந்த வந்ததால் மலைக்கோயிலே பக்தர்கள் கூட்டத்தால் திணறியது.  மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் வின்ச், ரோப்கார் நிலையங்களில் சுமார் மூன்று மணிநேரம் கட்டண டிக்கெட் பெற பக்தர்கள் காத்திருந்தனர். அதேபோல மலைக் கோயிலில் கட்டண, இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் நான்கு முதல் ஆறுமணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.  தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் பால்காவடி, மயில்பீலிகாவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்திருந்தனர். மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியில் புத்தாண்டை முன்னிட்டு மரகதலிங்கத்துக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு  சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் செய்யப்பட்டது. மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் பழனி திருமுருக பக்த சபா சார்பில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு விழாவில் நல்லாசிரியர் திருமலைசாமி, தேவி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்.  108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.  அடிவாரம், சன்னதி வீதிகளிலும், கிரிவீதியிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்த நிலையில் போதிய போலீஸார் போக்குவரத்தை கண்காணிக்க நிறுத்தப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அய்யம்புள்ளி சாலையில் சுமார் ஒரு கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இரவு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று  சின்னக்குமாரரை தரிசித்து பரவசமடைந்தனர். 

பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.