/

பழனி வரும் பக்தர்களுக்கு தொந்தரவு செய்யும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் துறை அறிவிப்பு

பழனி வரும் பக்தர்களுக்கு தொந்தரவு செய்து வரும் திருநங்கைகள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என திண்டுக்கல் எஸ்.பி., சரவணன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2015, 2:22 am

என்.​ அங்​கு​பாபு

பழனி வரும் பக்தர்களுக்கு தொந்தரவு செய்து வரும் திருநங்கைகள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என திண்டுக்கல் எஸ்.பி., சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எஸ்பி.,யாக சரவணன் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.  இதன் ஒரு கட்டமாக பழனியில் வெள்ளிக்கிழமை ரோந்துப்பணிக்காக ஏழு மோட்டார் சைக்கிள்களை காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த எஸ்பி., சரவணன் தெரிவித்ததாவது, பழனி பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு ஏழு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி பழனி நகரில் சண்முகபுரம், மூலக்கடை, புதுநகர் உள்ளிட்ட ஏழு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இப்பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் ரோந்து மேற்கொள்ளப்படும்.  பழனியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.  பழனி அடிவாரம் பகுதியில் ரவுண்டானா பகுதியில் கடந்த சில நாட்களாக தரிசனத்துக்கு வரும் பக்தர்களை வழி மறித்து கட்டாய பணம் வசூலிக்கும் திருநங்கைகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பக்தர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் திருநங்கைகள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும்.  மாவட்டத்தில் பல காவல் நிலையத்திலும் காவலர்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது.  விரைவில் இக்குறைகளை நீக்கும் வகையில் காவலர்களை நியமிக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பழனி அடிவாரம் பகுதியில் வீடுகளின் ஒரு பகுதியை விடுதிகளாக மாற்றி தினசரி வாடகைக்கு விடும் நிலை நீடித்து வருகிறது.  இதனால் குற்றவாளிகள் மறைவாக தங்கி இருக்க வாய்ப்பு ஏற்படுகிறது.  இதை வீட்டின் உரிமையாளர்கள் மாற்றிக்கொள்ளாவிட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை 99949 34488 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக தெரிவித்தால் கூட தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.