எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாளையங்கோட்டையில் பிடிபட்ட சிறுத்தையின் வழித்தடத்தை அறிய விசாரிக்க 12 பேர் குழு நியமனம் வனத்துறை நடவடிக்கை

பாளையங்கோட்டையில் குடியிருப்புகளுக்குள் புகுந்தபோது வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சிறுத்தை வந்த வழித்தடத்தை அறிய 12 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுதவிர

News image
Updated On :19 ஜனவரி 2015, 11:41 am

முத்துக்குமார்

பாளையங்கோட்டையில் குடியிருப்புகளுக்குள் புகுந்தபோது வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சிறுத்தை வந்த வழித்தடத்தை அறிய 12 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தின் அனைத்து மலையடிவார கிராமங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமால்நகர் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறுத்தை புகுந்தது. வீட்டின் மொட்டை மாடிகள், தெருக்களில் வலம் வந்த சிறுத்தையை கண்டு மக்கள் பீதியடைந்தனர். திருநெல்வேலி நகரம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை, தீயணைப்புத்துறை வீரர்களும், போலீஸார் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மயக்கமருந்து செலுத்தி அந்த சிறுத்தையைப் பிடித்தனர். நான்கரை மணி நேர போராட்டத்துக்கு பின்பு உயிருடன் பிடிபட்ட அந்த சிறுத்தை முண்டன்துறையில் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியார்பட்டி மலை, சிவந்திப்பட்டி மலை, கங்கைகொண்டான் மலை, வல்லநாடு மலை ஆகியவற்றில் சிறுத்தைப் புலி வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை. ஆகவே,  மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு சிறுத்தை வந்தது மக்களிடையே பெரும் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் ஏ.வெங்கடேசன் கூறியதாவது:

சிறுத்தைகளில் 4 வகைகள் உள்ளன. அவற்றில் பாளையங்கோட்டையில் பிடிபட்ட வகை எளிதில் இடம்பெயரும் தன்மை கொண்டது. காட்டுக்கோழிகள் உள்பட பறவையினங்களையும் வேட்டையாடி இறையாக்கிக் கொள்பவை. இதர விலங்குகள், மனிதர்களின் கண்களில் படாதவாறு புதர்கள் மற்றும் கிடைக்கி்ன்ற இடங்களில் எளிதாக பதுங்கும் குணாதிசயம் பெற்றவை.  மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து ஒரே நாளில் இவ்வளவு தொலைவு கடந்து இந்த சிறுத்தை வந்திருக்க வாய்ப்பில்லை. சில நாள்களுக்கு முன்பாக வந்து முத்தூர் அல்லது வல்லநாடு மலைப்பகுதியில் தங்கி அங்கு கிடைத்த இறைகளைச் சாப்பிட்டுவிட்டுதான் திருமால்நகர் பகுதிக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது.

பிடிபட்ட மூன்றரை வயது ஆண் சிறுத்தையை முண்டன்துறைக்கு கொண்டு சென்று அங்கு அதன் உடல்நிலையை கால்நடை மருத்துவரை வைத்து பரிசோதித்தோம். சோதனையில் பசியற்ற மற்றும் ஆரோக்கிய நிலையில் அந்த சிறுத்தை இருந்தது தெரியவந்தது. கௌதலையாறு எனும் அடர்ந்த வனப்பகுதியில் கூண்டில் இருந்து திறந்துவிட்டபோது மிகவும் அதிவேகமாக வெளியேறிச் சென்றது. பசியுடன் மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் வனவிலங்குகள் கூண்டில் இருந்து வெளியேறும்போது உற்சாகம் இழந்து காணப்படும்.

மக்கள் நெருக்கம் மிகுந்த நகரப்பகுதிக்கு வனவிலங்கு வந்திருப்பது மிகவும் ஆபத்தானதுதான். ஆகவே, சிறுத்தை வந்த வழித்தடத்தை கண்டுபிடிக்க திருநெல்வேலி வனச்சரகர் தார்ஷியூஸ் தலைமையில் 12 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தையின் கால்த்தடம், சிறுத்தையால் கொலை செய்யப்பட்ட சிறு மிருகங்கள் ஏதேனும் தெரியவந்தால் பொதுமக்கள் வனத்துறையிடம் தெரிவித்து ஒத்துழைப்பு அளிக்கலாம்.களக்காடு, திருக்குறுங்குடி, கடையம், அம்பாசமுத்திரம், புலவன்குடியிருப்பு உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

பயிற்சியை அதிகரிக்க வேண்டும்:

சிறுத்தையை போராடி பிடிப்பதில் முக்கிய இடம் பிடித்தவரான திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இணைப் பேராசிரியர் எஸ்.முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது:

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் வனவிலங்கு மருத்துவராகப் பணியாற்றி அனுபவம் எனக்கு பாளையங்கோட்டையில் சிறுத்தை மீது ஊசியைச் செலுத்த உதவியது. வனப்பகுதியில் வைத்து அந்த சிறுத்தையைப் பரிசோதித்த போது அதன் சோர்வு நிலையைப் போக்க ஊசி செலுத்தப்பட்டது. முழுவதும் தண்ணீர்ப் பாய்ச்சி குளிப்பாட்டிய பின்பே கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.

கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் வனவிலங்கு மருத்துவம், வனவிலங்குகளின் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆகிய பாடப்பிரிவுகளில் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் அறுவைச்சிகிச்சை முறைகள் கற்பிக்கப்படுகிறது. முழுவதும் காணொளிக்காட்சி மற்றும் படங்களைக் கொண்டு மட்டுமே இந்தப் படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. விலங்குகளுக்கான மயக்கமருந்துகள், மயக்க நிலையில் இருந்து விடுபடச் செய்யும் மருந்துகள் போன்றவையும் இதில் வருகிறது. வனவிலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் ஊதுகுழல் ஊசி முறை பழங்குடியினரின் பயன்பாட்டில் இருந்து வந்ததாகும். சுமார் 30 முதல் 45 அடி வரை தொலைவில் உள்ள வனவிலங்குக்கு ஊசியைச் செலுத்தி மயக்கமடையச் செய்ய முடியும்.

இப்போது அதிநவீன துப்பாக்கிகள் வந்துவிட்டன. கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட காற்றழுத்த முறைகளில் இயங்கும் இந்தத் துப்பாக்கிகள் 10 அடி முதல் 100 அடி தொலைவில் உள்ள வனவிலங்குக்கும் மிகவும் துல்லியமாக ஊசிகள் மூலம் மருந்துகளைச் செலுத்த முடியும். இதுபோன்ற இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் வகையில் வனத்துறையினருக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.